கேரளாவில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட மாட்டாது என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரான் கிருமி 12க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. உலக சுகாதார அமைப்பு ஓமிக்ரான் கிருமியை கவலைக்குரிய கொரோனா வகையாக பட்டியலிட்டுள்ள நிலையில், இந்தியாவில் கண்காணிப்பு, மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கொரோனா அதிகளவில் பரவி வரும் கேரளாவில் தடுப்பூசி வழங்கும் பணிகளை பினராயி விஜயன் அரசு தீவிரப்படுத்தி வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை நேரில் சந்திக்கும் பணியில் இருப்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கேரளாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுப்பவர்களை இனி இலவச மருத்துவ சிகிச்சை கிடையாது என்று முதல்வர் பினராய் விஜயன் அதிரடியாக அறிவித்துள்ளார்.
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வாரம் ஒரு முறை தங்களது சொந்த செலவில் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்து அதற்கான முடிவுகளை அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களால் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத பணியாளர்கள் அதற்குரிய சான்றிதழ்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேரளா அரசு உத்தரவிட்டுள்ளது. கேரளாவில் 5000 ஆசிரியர்கள் மத நம்பிக்கையை காரணம் காட்டி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து வரும் நிலையில், கேரள அரசு இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment