தமிழகத்தில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட பல அரசு துறைகளில் பல லட்சம் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் அரசு துறைகள் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப தமிழக அரசு முன் வரவேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அரசு துறைகளில் ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றும், முதல்வருடன் ஆலோசித்து, பணியாளர் தேர்வு, பதவி உயர்வு என பல முடிவுகளை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அவர் பேசுகையில், “தமிழகத்தில் அரசு துறைகளில், 14 லட்சம் முதல் 15 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது 9 லட்சம் பேர் தான் பணியில் உள்ளனர். அரசிடம் போதுமான நிதி இல்லை என்பதால் நிறைய இடங்கள் காலியாக உள்ளன.
இனி வரும் காலங்களில் தமிழ் மொழித்தாள் தேர்ச்சி கட்டாயமாக்கப் பட்டதால், அரசு பள்ளி மாணவர்கள், அரசு பணிக்கு செல்வது அதிகரிக்கும். மேலும், அரசுப் பணியாளர்களின் பணி தரத்தை மேம்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
பணியாளர் தேர்வு, பதவி உயர்வு உள்ளிட்டவை குறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளோம். இதனால், ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்.” என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment