இந்தியாவில் உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல்களை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷீல் சந்திரா அடுத்தவாரம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார்.ஓமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த இரவுநேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பல்வேறு மாநில அரசுகளும் விதித்து வருகின்றன. அடுத்த ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் முன்ஜாமின் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதி சேகர் யாதவ், கொரோனா பரவல் அச்சுறுத்தல் குறித்து கருத்து தெரிவித்தார்.தினமும் நூற்றுக்கணக்கான வழக்குகள் விசாரணை பட்டியலிடப்படுவதால் நீதிமன்றத்தில் தினமும் கூட்டம் அதிகரிக்கிறது. பெரும்பாலான மக்கள் சமூக இடைவேளி உள்ளிட்ட எந்த வித கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றவில்லை. ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனாவின் 3வது அலை ஏற்படலாம். கிராம பஞ்சாயத்து தேர்தல், மேற்குவங்காள சட்டசபை தேர்தலில் அதிகமானோருக்கு கொரோனா பரவியது. அது அதிக உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது.ஓமிக்ரான் பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் - கட்டுப்பாடுகள் அதிகரிப்பு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் பேரணிகளையும், கூட்டங்களையும் நடத்துகின்றன. இது போன்ற நிகழ்ச்சிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றுவது சாத்தியமன்றது. அரசியல் பேரணிகள், கூட்டங்கள் நடைபெறுவது நிற்காவிட்டால் கொரோனா இரண்டாவது அலையை விட மோசமக இருக்கும் என்று நீதிபதி கூறினார். ஓமிக்ரான் அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு தேர்தல் ஆணையம் தள்ளி வைக்க வேண்டும். தேர்தல் தொடர்பான கூட்டங்களுக்கு பிரதமர் மோடி தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி சேகர் யாதவ் தெரிவித்திருந்தார்.இதனிடையே இந்த விஷயத்தில் அடுத்த வாரம் உரிய முடிவு எடுக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நிலைமை குறித்து ஆய்வு செய்ய தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அடுத்தவாரம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.உத்தரகாண்ட் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக இரண்டு நாள் பயணமாக சுஷில் சந்திரா டேராடூன் சென்றுள்ளார். அங்கு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுஷீல் சந்திரா, அடுத்த வாரம் உத்தரபிரதேச மாநிலத்திற்கு சென்று நிலைமை குறித்து ஆய்வு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள கோவா, பஞ்சாப் மாநிலங்களுக்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் கடந்த வாரம் சென்று ஆய்வு மேற்கொண்டனர். உத்தரபிரதேச மாநிலத்திற்கு அடுத்தவாரம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் செல்ல உள்ளதாக சுஷீல் சந்திரா தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் அதிகமாக இருந்த போதிலும் கடந்த 2020ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல், மே மாதத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபைத் பொதுத்தேர்தல்கள் நடைபெற்றன. இதனையடுத்து கொரோனா பரவல் உச்சம் தொட்டது குறிப்பிடத்தக்கது. சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான ஆயத்தங்களை தேர்தல் ஆணையம் முன்கூட்டியே தொடங்கி, தற்போதைய நிலைமைகள் குறித்து அரசாங்கத்திடம் இருந்து தகவல்களைப் பெற்று வருகிறது. ஒரு வருடத்திற்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டால், மாநில சட்டமன்றத்தின் காலத்தை ஐந்தாண்டு காலத்திற்கு அப்பால் நீட்டிக்கும் விருப்பத்தை அரசியலமைப்பு வழங்குகிறது.தேர்தல் ஆணையத்தால் தேர்தலை நடத்த முடியாவிட்டால், அது மத்திய அரசிடம் தெரிவிக்கும் என்றும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு உட்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதை அடுத்து தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment