பட்டப்படிப்பு, பி.எட்., முடித்த பின், பிளஸ் 2 படித்தவரை, பட்டதாரி ஆசிரியராக நியமித்ததற்கு ஒப்புதல் வழங்க உத்தரவிட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. கோவையில் உள்ள புனித மைக்கேல் மேல்நிலை பள்ளியில், ஜோசப் இருதயராஜ் என்பவர் பட்டதாரி ஆசிரியராக 2007ல் நியமிக்கப்பட்டார்.
மேல்முறையீடு
இவர் 1984ல் 10ம் வகுப்பு முடித்த பின், 1991ல் பட்டப் படிப்பு; 1993ல் பி.எட்., பட்டம் பெற்றார். அதன்பின், பிளஸ் 2 படிப்பை 2010ல் முடித்தார்.இவரது பணி நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க, பள்ளி கல்வி இணை இயக்குனர் மறுத்து விட்டார். கல்வி தகுதியை முறையாக பெற்றிருக்க வில்லை என்று காரணம் கூறப்பட்டது.
அதாவது, 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப் படிப்பு என வரிசைப்படி வரவில்லை.இதையடுத்து, நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஒப்புதல் வழங்கும்படி உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் பள்ளி கல்வி இணை இயக்குனர் மற்றும் கோவை மாவட்ட கல்வி அதிகாரி மேல்முறையீடு செய்தனர்.
மனு, நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.விஜயகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. பள்ளி கல்வி சார்பில், சிறப்பு பிளீடர் கே.வி.சஜீவ்குமார் ஆஜரானார்.
ஊக்க ஊதியம்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:பட்டப்படிப்பு மற்றும் பி.எட்., முடித்த பின், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுள்ளார். 2000ம் ஆண்டில் அரசு பிறப்பித்த உத்தரவில், 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சிக்கு பின் பெறப்படும் பட்டங்களே, பொதுப்பணிகளில் நியமனம் மற்றும் பதவி உயர்வு பெற தகுதியானது என்று கூறப்பட்டுள்ளது.
யாரும் கூடுதல் தகுதியை பெற முடியும்; ஆனால், நிர்ணயிக்கப்பட்ட முறைப்படி அந்த தகுதியை பெற்றிருக்கவில்லை என்றால், வேலைவாய்ப்பு, பதவி உயர்வு, ஊக்க ஊதியம் பெற அதை பயன்படுத்த முடியாது.எனவே, ஒரு பணி நியமனத்துக்கான தகுதியை நிர்ணயித்திருக்கும் போது, ஒருவரின் வசதிக்கேற்ப வெவ்வேறு அர்த்தங்களை அளிப்பது, கண்டிப்பாக குழப்பங்களை ஏற்படுத்தும். அதனால், தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
பணிபுரிந்த நாட்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டிருந்தால், அதை திரும்ப பெறக்கூடாது. நியமனமே தவறு என்பதால், இதர பணி பலன்களை பெற அவருக்கு உரிமைஇல்லை.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment