மன அழுத்தம்
இன்று அதிகம் பேசப்படும் ஒரு உளவியல் பிரச்னை. உடலைவிட மன ரீதியான பிரச்னைகளால் பாதிக்கப்படுவோர்தான் இன்று அதிகம். வாழ்வியல் முறையில் ஏற்படும் மாற்றங்களே இதற்கு முக்கியக் காரணம்.
குடும்பம், வேலை, தனிப்பட்ட பிரச்னைகள் என ஒருவருக்கு மன அழுத்தம் ஏற்பட பல காரணங்கள் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இல்லை என்றால் மன அழுத்தம் இருக்க வாய்ப்பு அதிகம். ஏன், அன்றாட வேலைகள் பாதிக்கப்படும்போதும் வழக்கத்திற்கு மாறாக ஒரு செயலைச் செய்யும்போதும்கூட மன அழுத்தம் ஏற்படலாம்.
குறிப்பாக தொற்றுநோய் காலத்தில் வீட்டில் முடங்கியிருந்த பலருக்கும் ஒருவித எரிச்சல், வெறுமை உருவாகியிருக்கும். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பர்.
ஆனால், மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதா? என்பதை பலரால் முழுமையாகக் கண்டறிய முடியவில்லை. மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான 12 முக்கிய அறிகுறிகள்..
தூக்கமின்மை
தொடர்ச்சியாக இரவில் தூக்கம் வராவிட்டாலோ அல்லது தூக்கம் சீரற்று இருந்தாலோ உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டிருக்கலாம். மனநிலை சரியில்லை எனில் தூக்கம் இருக்காது.
அமைதியற்ற உணர்வு
தூக்கமின்மையுடன் சிலர் அமைதியற்ற நிலையில் இருப்பார்கள். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவது, கத்துவது என இருப்பர். அதிக டென்ஷன் என்று கூறலாம். இவர்களின் மூளை அமைதியற்ற நிலையில் இருக்கும். இவ்வாறு இருந்தாலும் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருக்கலாம்.
பசியின்மை / அதிக பசி
வழக்கத்தைவிட குறைவாக பசி எடுத்தாலோ அல்லது சாப்பிடாமல் இருந்தாலோ மன அழுத்தம் இருக்கலாம். இன்னொரு வகை, வழக்கத்திற்கு மாறாக அதிகம் சாப்பிடுவது. தொடர்ச்சியாக சாப்பிடுவது, குறிப்பாக நொறுக்குத் தீனி, பொருந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டாலும் பசி அடங்க மறுப்பது போன்ற உணர்வு.
ஊக்கமின்மை
நீங்கள் வழக்கத்தைவிட குறைவான ஊக்கத்தை உணர்கிறீர்களா? அப்படியெனில் உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்னைகள் இருக்கலாம். இல்லையெனில் முன்னதாக அனுபவித்த மகிழ்ச்சியை, வெற்றியை அடையாமல் இருக்கலாம். அந்த நேரத்தில் நீங்கள் சலிப்பாக உணரலாம்.
ஆற்றல் அளவு
உடலும் மனமும் சோர்வாக இருக்கிறது? ஆனால் ஏன் என்று தெரியவில்லை? எந்நேரமும் மந்தமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். நன்றாக சாப்பிட்டு தூங்கினாலும் இந்த நிலை தொடர்ச்சியாக இருக்கும்.
உடல்நல பாதிப்பு
வழக்கத்தைவிட அதிகமாக உடலியல் பிரச்னைகள் ஏற்பட்டால் அதாவது, நோயெதிர்ப்பு சக்தி குறைந்து உடல் தொந்தரவுகள் ஏற்படுவது என்பதும் மன அழுத்தத்தின் பக்க விளைவாக இருக்கலாம்.
உங்களுக்கு சாதாரண சளி, இருமல் என உடல் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீள வழக்கத்தைவிட மிகவும் கடினமாக இருந்தால் மனநல பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பு அதிகம்.
கவனமின்மை
கவனமின்றி உங்கள் வேலையைச் செய்கிறீர்களா? அல்லது சிறிது நேரத்திற்கு முன் என்ன செய்தோம் என்று மறந்துவிடுகிறதா? சற்று முன்பு பேசிய நபரிடம் என்ன பேசினோம் என்று ஞாபகம் இல்லையா? அப்படியெனில் மனதில் ஏதோ ஒரு விஷயத்தை நீங்கள் அசைபோட்டுக் கொண்டிருப்பதாலே இந்த மறதி ஏற்படுகிறது.
சாதனையில் அலட்சியம்
அன்றாட வேலைகளை முடித்தால் மட்டுமே தனிப்பட்ட முறையில் ஒரு திருப்தி கிடைக்கும். அதில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் ஒருவித மன அழுத்தம் ஏற்படும்.
அந்தவகையில், உங்களுடைய அன்றாட வேலைகளை முடிக்காமல் இருப்பது, உங்கள் இலக்கை அடைய அலட்சியமாக செயல்படுவதெல்லாம் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள்.
அதிகப்படியான எதிர்மறை, எரிச்சல்
வழக்கத்தை விட அதிகமாக எரிச்சலடைவது, பதட்டப்படுவது, அதிகப்படியான எதிர்முறை உணர்வு ஆகியவை இருந்தால் உங்களுக்கு மனரீதியான ஒரு இடைவெளி தேவை. இந்த எரிச்சல், கோபம் எல்லாம் உங்களை விரக்திக்கு கொண்டு செல்லும்.
சுயக் கட்டுப்பாடு
அனைத்து விஷயங்களிலும் நீங்கள் கட்டுப்பாட்டை இழந்து செயல்பட்டால் அது மிகவும் ஆபத்தானது. உங்களுடைய உடல், மனம் இரண்டின் கட்டுப்பாடும் உங்களிடமே இருக்கிறது. இதை இரண்டும் கட்டுப்படுத்தத் தவறினால் மனப்பிரச்னை உள்ளதை உறுதி செய்துகொள்ளலாம்.
உதாரணமாக, இன்று நீங்கள் மது அருந்த வேண்டும் என்று நினைத்து யாரோ ஒருவர் தடுக்க முயற்சித்தாலும் அவர்கள் கூறுவதைக் கேட்காமல் மது அருந்துவது. மேலும், அளவுக்கதிகமாக மது அருந்துவது.
பிடித்த விஷயத்தில் ஆர்வமின்மை
வெளியே சாப்பிடச் செல்வது, திரைப்படங்களுக்குச் செல்வது, நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவது, விளையாடுவது என உங்களுக்கு பிடித்த விஷயங்களில் ஆர்வத்தை இழந்தால் அது மிகவும் கவலைக்குரியது. இந்த நேரத்தில் நீங்கள் உடனடியாக உங்கள் மனநிலை சரிசெய்ய வேண்டும்.
சுய பாதுகாப்பு
உங்களை நீங்களே கவனித்துக்கொள்ளவில்லை என்றால் மனதளவில் நீங்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கலாம். அலுவலகத்தில் ஓய்வின்றி வேலை செய்வது, அன்றாட வேலைகளைச் செய்யவே சிரமப்படுவது, உங்களுடைய உடல்நலத்தை சரியாக பேணாதது, உங்கள் மனதை இலகுவாக்கும் செயல்களை புறக்கணிப்பது என்றிருந்தால் மனம் பாதிக்கப்படும்.
தீர்வு என்ன?
மன அழுத்தம் என்பது அவ்வப்போது எல்லோரும் உணரக்கூடியதுதான். ஆனால், நீண்ட நேரம் அது தொடர்ந்தால்தான் பிரச்னை. 'இதுவும் கடந்து போகும்' என்று அந்த சூழ்நிலையைக் கடந்துவிடுங்கள்.
உங்கள் மனதை பாதிக்கக்கூடிய அந்த பிரச்னைக்குத் தீர்வு காணுங்கள். இல்லையெனில் அதை ஏற்றுக்கொண்டு அதனை விட்டுவிடுங்கள்.
மன அழுத்தத்தை சரிசெய்ய உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள். நாள் முழுவதும் உங்களை பிசியாக வைத்துக்கொள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றில் கவனம் செலுத்தலாம்.
பழைய நிலைக்குத் திரும்ப நண்பர்கள், குடும்பத்தினரின் உதவியை நாடலாம். அதன்மேலும், மன அழுத்தம் அதிகரிக்கும் பட்சத்தில் உடனடியாக மனநல மருத்துவரை அணுகுவது நல்லது.
மனம் பாதிக்கப்பட்டால் உடல்நலமும் பாதிக்கப்படும். எனவே, இரண்டும் ஆரோக்கியமாக இருக்க மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment