சென்னை: பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம், வெள்ளி என இரண்டு முறை வென்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு குரூப்-1 பணிக்கான பணி நியமன ஆணையை முதல்வர் மு.க ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் பிரிவில் 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி அசத்திய மாரியப்பன் அந்த தொடரில் தங்கம் வென்றார்.
இதனால் இந்த முறையும் மாரியப்பன் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்ற மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி மாரியப்பன் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து இந்தியா வந்த மாரியப்பன் தங்கவேலுவிற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மாரியப்பன் தங்கவேலு கடந்த ரியோ பாராஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற போதே அவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்று முந்தைய ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. முக்கியமாக குரூப் 1 பிரிவில் அவருக்கு தமிழ்நாடு அரசில் வேலை வாய்ப்பு கொடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அவருக்கு நிதி உதவி மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. வேலை கிடைக்காத நிலையிலும் மாரியப்பன் மிக தீவிரமாக அடுத்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தயார் ஆனார். அவருடன் பதக்கம் வென்ற மற்ற மாநில வீரர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டது. ஆனால் இவருக்கு வேலை கிடைக்கவில்லை.
தமிழ்நாட்டில் பல ஒலிம்பிக் வீரர்கள், தடகள வீரர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த மாரியப்பன் தங்கவேலு தனக்கு வேலை கிடைக்கவில்லை என்று உருக்கமாக கோரிக்கை வைத்தார். அப்போது மாரியப்பன் கையை பிடித்து முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக பேசினார். உனக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும். அரசு வேலையை உனக்கு கண்டிப்பாக கொடுப்பேன் என்று அப்போதே முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தார்.
முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்தபடி இன்றைய தினம் மாரியப்பன் தங்கவேலுக்கு அரசு வேலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். மாரியப்பன் தங்கவேலுக்கு குரூப்-1 பணிக்கான பணி நியமன ஆணை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு காகித ஆலையின் மார்க்கெட்டிங் பிரிவில் மாரியப்பன் தங்கவேலுக்கு துணைமேலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை பெற்றுக்கொண்ட மாரியப்பன் தங்கவேலு நெகிழ்ச்சியுடன் நன்றி கூறினார். குரூப் 1 பணியிடம் கொடுத்தது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய மாரியப்பன் அரசு வேலை கொடுத்த முதல்வருக்கு நன்றி என்று கூறினார்.
No comments:
Post a Comment