தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு நேரடி எழுத்துத் தேர்வாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
பொறியியல் தேர்வு:
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து ஜூலை 26 முதல் கலை அறிவியல் கல்லூரிகளை தொடர்ந்து பொறியியல் கல்லூரிகளிலும் 2021 -2022ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்தாண்டு கொரோனா அச்சம் காரணமாக மாணவர் சேர்க்கையும், கலந்தாய்வும் ஆன்லைன் வாயிலாகவே நடைபெற்றது. மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு முடிவடைந்ததும் 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் கட் ஆப் மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெற்றது.
அக்டோபர் 17ம் தேதி வரை பொது மற்றும் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெற்றது. தற்போது முதலாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பருவத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும் என தனியார் கல்லூரிகள் கோரிக்கை விடுத்தனர்.
நடப்பு கல்வியாண்டில் நேரடி தேர்வுகள் தான் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் செமஸ்டர் தேர்வு எழுத்துத் தேர்வாகவே நடைபெறும் என துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் பி.ஆர்க் கலந்தாய்வில் தேர்வு செய்யப்பட்டவர்கள் இன்று முதல் கல்லூரிகளுக்கு சென்று உங்கள் சேர்க்கையை உறுதிபடுத்தி கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment