சிறப்பு வகுப்புகளில் பங்கேற்பதற்கு மாணவ - மாணவிகளை கட்டாயப்படுத்தக் கூடாது என்று பள்ளி ஆசிரியர்களுக்கு கோவை முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் முதன்மைக் கல்வி அலுவலர் கீதா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பள்ளி நிர்வாகங்கள் தங்களிடம் பணியாற்றும் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பற்றிய விவரங்களை நன்கு அறிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு பேருந்திலும் கட்டாயம் நடத்துநர்களை நியமிக்க வேண்டும். மாணவிகள் பயணிக்கும் பேருந்தாக இருந்தால் கண்டிப்பாக பெண் நடத்துநரையே நியமிக்க வேண்டும்.
பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி, அவை தொடர்ந்து இயங்குவதை பள்ளி முதல்வர் உறுதி செய்ய வேண்டும். தனியார் வாகனங்கள் மூலம் பள்ளிக்கு வரும் மாணவ - மாணவிகள், அவர்கள் வரும் வாகனங்கள் தொடர்பான முழு விவரங்களையும் பெற்று தனி பதிவேட்டில் பராமரிக்க வேண்டும்.
சிறப்பு வகுப்புகள் முடிந்து மாணவர்கள் அனைவரும் மாலை 5.30 மணிக்குள் வீடுகளுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைப்பதை பள்ளி முதல்வரும், நிர்வாகத்தினரும் உறுதி செய்த பிறகே பள்ளியை விட்டுச் செல்ல வேண்டும். பள்ளிகளில் உரிய கல்வித் தகுதி பெற்ற ஆசிரியர்களையே பணியமர்த்த வேண்டும்.
அனைத்து ஆசிரியர்களுக்கும் பாலியல் வன்கொடுமை, பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். ஆசிரியர்களின் வருகைப் பதிவேடு உரிய முறையில் பராமரிக்கப்பட வேண்டும். யாரேனும் பணியிலிருந்து விலகினால், பணிவிலகல் ஆணை, சார்பு செய்த அலுவலக நகலை பள்ளியில் கண்டிப்பாக பராமரிக்க வேண்டும்.
மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது பெண் ஆசிரியர்கள் உடனிருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். சிறப்பு வகுப்புகளுக்கு மாணவ - மாணவிகளை கட்டாயப்படுத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களின் பெற்றோரிடம் இசைவு கடிதம் பெற்று அதை கோப்புகளில் பராமரிக்க வேண்டும்.
பள்ளிகளில் புகார் குழு, புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். பெறப்படும் புகார் விவரங்களை உடனடியாக குழந்தைகள் உதவி மையம், முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு தெரிவிக்க வேண்டும். பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும்” எனும் அறிவுரைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
No comments:
Post a Comment