தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் அனைத்து வகுப்புகளும் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. தீபாவளி மற்றும் கனமழை காரணமாக கடந்த வாரங்களில் அடிக்கடி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் அனைத்து பள்ளிகளும் வழக்கம் போல இயங்குகின்றன. இந்நிலையில் தொடர் விடுமுறை மற்றும் ஆன்லைன் முறையில் பாடங்கள் நடத்தப்படுவதால் இந்த முறை பொதுத் தேர்வுகள் தள்ளி போகுமா என்று கேள்வி எழுந்தது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்,நடப்பு கல்வி ஆண்டு இறுதியில் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்று கூறினார். பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தல் கொடுக்கும் சம்பவம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா போது முடக்கம் காரணமாக மாணவர்கள் இடைநிற்றலும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சென்னையில் உள்ள பள்ளிக் கல்வித்துறை அலுவலகத்தில் பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் தலைமையில் இன்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதில் பள்ளி இடைநிற்றல், பொதுத்தேர்வு,பாலியல் புகார்களை தடுப்பது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment