தமிழக அரசில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்களின் பணி காலத்திற்கு பிந்தைய நலனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசாங்கத்தால் 1978 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறு கொண்டு வரப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் தமிழக அரசு பணியாளர்கள் பணி ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியம், பொதுநலன் கருதி வழங்கப்பட்ட கட்டாய ஓய்வுக்குப் பிந்தைய ஓய்வூதியம், பணி நீக்கம் அல்லது பணித் துறப்பு ஆகியவற்றிற்கு வழங்கப்படும் இழப்பீடு, 20 ஆண்டுகால பணியை முடித்திருந்தால் பெறும் ஓய்வூதியம், ஓய்வூதியதாரரின் மரணத்திற்கு பின்னர் அவரது மனைவி அல்லது தகுதியுடைய வாரிசுகள் பெரும் குடும்ப ஓய்வூதியம் ஆகிய பலன்களை பெற்றனர்.
தமிழக அரசால் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தமிழ்நாடு ஓய்வூதிய விதிகள் 1964 விதி எண் 49 ஐ திருத்தி வழங்கப்பட்டது. இந்த விதி திருத்தத்தின் மூலம் தகுதியுடைய அரசு ஊழியர் மற்றும் அவரது வாரிசுகள் அந்த அரசு ஊழியரின் பணி காலத்திற்குப் பின்னர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியத்தை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆகின்றனர்.
இந்தச் சூழலில் தமிழ்நாடு அரசு அரசாணை நிலை எண் 259 நிதித்துறை நாள் 6.8.2003 என்ற அரசாணையை பிறப்பித்தது 1.4.2003 முதல் தமிழக அரசில் நியமனம் செய்யப்படும் அரசு ஊழியர்களுக்கு முந்தைய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து விலக்கு அளித்து அவ்வாறு நியமனம் செய்யப்படும் அரசு ஊழியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து விதி திருத்தம் செய்தது..
புதிதாக கொண்டு வரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாற்றும் அரசு ஊழியர் 10 சதவீதமும் தமிழக அரசு 10 சதவீதமும் அளித்து அதனை அரசு ஊழியரின் ஓய்வு நாளன்று திரும்பச் செலுத்தும் திட்டமாக உள்ளது.
புதிதாக கொண்டு வரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் பல்வேறு மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களால் தள்ளுபடி செய்யப்பட்டு அந்த உத்தரவுகள் இந்திய உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையால் இன்றைய சூழலில் மத்திய அரசாங்கம் மற்றும் மாநில அரசாங்கங்கள் கொள்கை முடிவு எடுத்தாலே அன்றி முந்தைய ஓய்வூதிய திட்டம் திரும்ப வருவதற்கு வாய்ப்பே இல்லை.
ஆனால் 1.4.2003 க்கு முன்னர் தமிழக அரசு பணிகளில் தினக்கூலிகளாக சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர்களாக தொகுப்பூதிய பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்பட்டு 1.4.2003 க்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் பணியாளர்கள் இன்றளவிலும் புதிதாக கொண்டு வரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் தொடர்கின்றனர். அத்தகைய ஊழியர்களுக்கு நீக்கறவு செய்யப்பட்ட முந்தைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்கள் மறுக்கப்பட்டு வருகின்றது.
இதைப்போன்ற வேறு ஒரு நிகழ்வில் இந்திய உச்ச நீதிமன்றம் ஹர்பன்ஸ் வழக்கில் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்ட நாளுக்கு முன்னர் தொகுப்பூதிய ஊழியர்களாக, சிறப்பு காலமுறை ஊதிய ஊழியர்களாக, தினக்கூலிகளாக அரசு பணிகளில் நியமனம் செய்யப்பட்டு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்பட்ட பின்னர் பணிநிரந்தரம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் முந்தைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழே பதிவு செய்யப்பட்டு அந்த அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெறும் பொழுது மாதாந்திர ஓய்வூதியம் அளிக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆகையால் 1 4 2003 க்கு முன்னர் தொகுப்பூதிய ஊழியர்களாக சிறப்பு காலமுறை ஊழியர்களாக தினக்கூலிகளாக தமிழக அரசு பணிகளில் பணி நியம noனம் செய்யப்பட்டு 1.4.2003 க்கு பின்னர் பணி நிரந்தரம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுகள் முந்தைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு முழு தகுதி உடையவர்கள் ஆகின்றனர்.
ஜெ. பூவேந்திர ராஜன்,
வழக்கறிஞர்.
No comments:
Post a Comment