2021- 2022ஆம் ஆண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இதற்கான கால அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன.
அந்தச் சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் இரண்டு பருவத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது.
அதன்படி 2021- 22ஆம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ சார்பில் பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஏதேனும் ஒரு தேர்வை நடத்த முடியாத சூழலில், ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வு முடிவுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
புதிய தேர்வு முறையை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்ளும் வகையில், மாதிரி கேள்வித்தாள்களும், மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும் சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
இந்நிலையில், 2021- 2022ஆம் ஆண்டுக்கான முதல் பருவ சிபிஎஸ்இ பொதுத் தேர்வு அடுத்த மாதம் தொடங்க உள்ளது.
இதற்கான கால அட்டவணை விரைவில் cbse.gov.in என்ற இணையதளத்தில் வெளியாக உள்ளது. 4 முதல் 8 வார கால இடைவெளியில் முதல் பருவத் தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்வில் பங்கேற்க உள்ள மாணவர்களின் பட்டியலை, ஏற்கெனவே பள்ளிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளன. தேர்வு 90 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. ஒவ்வொரு பருவத் தேர்விலும் பாடத்திட்டத்தின் 50 சதவீதப் பகுதியில் இருந்து கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
No comments:
Post a Comment