அந்தமானில் இன்று உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
தென்மேற்கு பருவமழை இன்னும் நீடித்து வரும் நிலையில், தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேலும் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே, வங்க கடலில் 10-ந் தேதி (நேற்று) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருந்த நிலையில், அது தற்போது வடக்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இன்று (திங்கட்கிழமை) இரவோ அல்லது நாளையோ (செவ்வாய்க்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.
கனமழை பெய்யக்கூடும்
இதன் காரணமாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் இன்று (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, சேலம், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், வட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளை (செவ்வாய்க்கிழமை) நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, விழுப்புரம், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அனேக இடங்களில் மிதமான மழை
நாளை மறுதினமும் (புதன்கிழமை), 14-ந் தேதியும் (வியாழக்கிழமை) நீலகிரி, கோவை, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், வட மற்றும் தென் மாவட்டங்கள், புதுச்சேரியில் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம், எரையூர் 7 செ.மீ., தொழுதூர், தேவாலா தலா 6 செ.மீ., பாலக்கோடு 4 செ.மீ., வேப்பூர், ஆத்தூர், சிதம்பரம், புவனகிரி, மாரண்டஹள்ளி தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment