இன்றைய தலைமுறை இளைஞர்கள் பெரும்பாலும் தங்களது நண்பர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசுவதை விட சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு பேசுவதையே அதிகமாக காண முடிகிறது.
இதற்கு காரணம், சமூக வலைத்தளங்களில் விரைவான செயல்பாடுதான். இதனாலேயே அவை இளைஞர்களின் அன்றாட பயன்பாடாக மாறிவிட்டது என்றே கூறலாம். எனினும் அதில் நன்மைகளும், தீமைகளும் பங்கிட்டு அமர்ந்து இருக்கின்றன என்பதை மறக்கக்கூடாது. அதை பற்றி காண்போம்...!
சமூக வலைத்தளங்களில் உள்ள நன்மைகள் பற்றி முதலில் தெரிந்து கொள்ளலாம். இந்த நவீன காலத்தில் முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களை இளைஞர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏன், அதில் மூழ்கியே கிடக்கின்றனர் என்றே கூறலாம். புதிய உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவும், கடந்த உறவுகளை திரும்ப பெறவும், தொடரும் உறவுகளை தக்கவைத்து கொள்ளவும் சமூக வலைத்தளங்கள் பெரிதும் பயனளிக்கின்றன
. பள்ளி, கல்லூரியை ஒன்றாக முடித்த நண்பர்கள் வெவ்வேறு ஊர்களில் வாழலாம். அவர்களை தொடர்பு கொண்டு நட்பை தொடரவும், அவ்வப்போது பசுமையான நினைவுகளை அசைபோடவும் சமூக வலைத்தளங்கள் கைகொடுக்கின்றன. உடனுக்குடன் செய்திகளையும், நினைத்த நேரத்தில் தேவையான தகவல்களையும் பெற உதவுகின்றன.
மகிழ்வித்து மகிழ் என்பதன் அடிப்படையில் ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொள்கின்றனர். அது எங்கோ இருக்கும் ஒருவருக்கு தேவையானதாக கூட இருக்கலாம். அவர்களுக்கு அது பயனுள்ளதாக மாறுகிறது. இதேபோல நமக்கு தேவையான தகவல்கள், மற்றவர்கள் மூலமாக வந்து சேர்கிறது.
குறிப்பாக தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தபோது, கொதித்து எழுந்து இளைஞர்கள் நடத்திய போராட்டம் வெற்றி பெற பெரிதும் உதவியது சமூக வலைத்தளங்கள்தான் என்பதை மறுக்க முடியாது. அதன் மூலமாகவே அனைவரையும் எளிதில் தொடர்பு கொண்டு போராட்டத்துக்கு ஒன்றிணைத்து வெற்றி பெற முடிந்தது.
இதுபோன்று பல்வேறு நன்மைகளை சமூக வலைத்தளங்கள் நமக்கு தந்தாலும், விரும்ப தகாத தீமைகளையும் கொடுத்து கொண்டுதான் இருக்கின்றன.
அதிலும் அதிகம் பாதிக்கப்படுவது இளம்பெண்கள்தான். தற்போது சிறுமிகளும் அந்த வலைக்குள் சிக்கி விடுகின்றனர் என்பது கொடுமையிலும் கொடுமை. சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பகிர்வது, வீடியோக்களை பகிர்வது, சுய விவரங்களை பகிர்வது போன்ற செயல்கள் சர்வ சாதாரணமாக அரங்கேறுகின்றன. ஆனால் அவற்றை சில விஷமிகள் சேகரித்து, தவறாக பயன்படுத்துவதுதான் அவர்கள் பாதிக்கப்பட முக்கிய காரணமாக அமைகிறது. இதனால் சில நேரங்களில் ஒரு குடும்பமே சிதைந்து போகும் நிலை உருவாகி விடுகிறது.
அதுபோன்ற விஷமிகளை கட்டுப்படுத்துவது சுலபம் இல்லை என்றாலும், நம்மை நாமே தற்காத்து கொள்ள முயல்வது சிறந்தது. எனவே தங்களது புகைப்படங்களையோ, வீடியோக்களையோ, சுய விவரங்களையோ சமூக வலைத்தளங்களில் பகிர்வதை நிறுத்தி கொள்வது சாலச்சிறந்தது.
இதுமட்டுமின்றி சமூக வலைத்தங்களில் ஆதாரமற்ற தவறான தகவல்களும் இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அவற்றை உண்மை என நம்பி ஏமாந்து போகும் அபாயமும் இருக்கிறது. இதனால் பல்வேறு மோசடி சம்பவங்கள் அரங்கேறுகின்றன. மேலும் தனி நபர் மீது அவதூறு பரப்பும் செயலுக்கு சமூக வலைத்தளங்கள் துணைபோகின்றன. இது தவிர அவை புதிய உறவுகளை ஏற்படுத்தி கொள்ள வாய்ப்பு அளித்தாலும், சில நேரங்களில் கூடா நட்பு கேடாய் முடியும் என்பதை போல விபரீதத்தில் முடியும் வாய்ப்பையும் அளிக்கின்றன.
இன்றைய காலத்தில் அரங்கேறும் குற்ற செயல்களுக்கு சமூக வலைத்தளங்களும் ஒரு காரணமாக அமைகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. புதிய கண்டுபிடிப்புகள் ஒரு பக்கம் நன்மைகளை தந்தாலும், மற்றொரு பக்கம் தீமைகளையும் தந்து கொண்டுதான் இருக்கின்றன.
பாலும், நீரும் கலந்து இருந்தால் நீரை விலக்கிவிட்டு பாலை மட்டும் பருகும் அன்ன பறவை போல சமூக வலைத்தளங்களில் கிடைக்கும் நன்மைகளை மட்டும் எடுத்துக்கொண்டு தீமைகளின் கையில் சிக்காமல் தப்பித்து கொள்வது அவசியம் என்பதை இளைஞர்கள் உணர வேண்டும்.
ஜே.குமார், இளங்கலை வணிகவியல் 3-ம் ஆண்டு, பிஷப் அம்புரோஸ் கல்லூரி, கோவை.
No comments:
Post a Comment