அரசு பள்ளியில் படித்து ஐ.ஐ.டி. நுழைவுத்தேர்வில் வென்ற மாணவர் அருண்குமாரை நேரில் அழைத்து பாராட்டியதுடன், அவரது கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ஐ.ஐ.டி. நுழைவு தேர்வில் தேர்ச்சி
திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் கரடிப்பட்டி கிராமத்தை சேர்ந்த பொன்னழகன் - பூவாத்தாள் தம்பதியின் மகன் அருண்குமார், செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஆவார்.
இவர், இந்த ஆண்டு ஐதராபாத்தில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி. - ஐதராபாத்) என்ஜினீயரிங் படிப்பதற்கான நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளார்.
மாணவர் அருண்குமாரை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் வரவழைத்து பாராட்டி வாழ்த்தினார்.
கல்வி செலவை அரசு ஏற்கும்
எளிய பின்புலத்தில் இருந்து வந்து அரசு பள்ளியில் படித்து இச்சாதனையை நிகழ்த்திய மாணவர் அருண்குமாரை பாராட்டிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மேற்படிப்புக்கான கல்வி செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்று உறுதி அளித்தார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment