ஆசிரியர் பணி நியமனத்துக்கான வயது வரம்பை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்தவாரம் வெளியாக உள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர் நியமனத்திற்கான வயது வரம்பு 57 ஆக இருந்தது. ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் அதற்கு ஓராண்டு முன் வரை நியமனம் செய்யலாம் என்ற அரசாணை பின்பற்றப்பட்டு வந்தது.இந்நிலையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 59 வயது வரை பணி நியமனம் மேற்கொள்ளலாம் என்று பட்டதாரிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அதற்கு நேர்மாறாக ஆசிரியர்களின் வயது வரம்பை 40 ஆக தளர்த்தி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது.
அரசு பள்ளிகளில் 2207 முதுநிலை ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வு சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதில் தான் இந்த வயது வரம்பு அமலுக்கு வந்துள்ளது. இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது.பல ஆண்டுகளாக அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்படாத நிலையில் தற்போது அதற்கான நடவடிக்கை துவங்கியுள்ளது. இதற்காக பல ஆண்டுகளாக படித்து பட்டங்கள் பெற்று பயிற்சி பெற்று வந்தவர்களுக்கு வேலை கிடைக்காத நிலை உள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பட்டதாரிகள் தரப்பில் சென்னையில் பல்வேறு கட்ட போராட்டங்களும் நடந்தன. இந்நிலையில் ஆசிரியர்களின் நியமன வயது வரம்பை உயர்த்துவது தொடர்பாக பள்ளி கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடத்தி முதல்வருக்கு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்.வயது வரம்பு அதிகரிக்கப்பட்டால் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. Thanks to Dinamalar
No comments:
Post a Comment