இல்லம் தேடிக் கல்வி சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர்/ ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையில் சிறந்த சின்னத்தை உருவாக்குவோருக்கு ரொக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
கரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொதுமுடக்கக் காலங்களில், பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு “இல்லம் தேடிக் கல்வி” என்னும் திட்டத்தை மாநிலம் முழுவதும் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டம் மாநில அரசின் 100 சதவீத நிதிப் பங்களிப்பின்கீழ் ரூ.200 கோடி மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது. பள்ளி மாணவர்களின் கல்வி நலனுக்காகச் செயல்படுத்தப்பட உள்ள இல்லம் தேடிக் கல்வி சிறப்புத் திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நகர்/ஊரகப் பகுதி மக்களிடையே எளிதாகக் கொண்டு சேர்க்கும் வகையிலும் மற்றும் இத்திட்டத்தின் ஒட்டுமொத்த இலக்கை மிக எளிதாக மக்களுக்கு உணர்த்தவும் இத்திட்டத்திற்கான இலட்சினை (Logo with Tag Line) மக்கள் பங்கேற்புடன் உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான இலட்சினை (Logo with Tag Line) உருவாக்கும் போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் அனைத்து நகர்/ ஊரகப் பகுதியில் உள்ள பள்ளி / கல்லூரி மாணவர்கள், பெண்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் தனிநபராகவோ அல்லது குழுவாகவோ பங்கேற்கலாம். வயது வரம்பு ஏதும் இல்லை. போட்டியாளர்கள் தங்களின் இறுதிப் படைப்பினை illamthedikalvi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 24.10.2021 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்கவேண்டும். போட்டியாளர்களால் தயாரித்து வழங்கப்படும் இலட்சினை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககத்தால் இறுதி செய்யப்படும்.
சிறந்த மற்றும் பொது மக்களுக்கு எளிய வகையில் புரிந்திடும் வகையிலான சின்னத்தை உருவாக்கும் ஒரு வெற்றியாளருக்கு ரூபாய் 25,000/- ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
No comments:
Post a Comment