எம்டெக் பயோ-டெக்னாலஜி படிப்புகளுக்கு 69% ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை:
அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள எம்டெக் பயோ-டெக்னாலஜி படிப்புக்கான மாணவர் சேர்க்கை 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில்தான் நிரப்பப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி திட்டவட்டமாகக் கூறினார்.
இதுதொடர்பாக, சென்னைதலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலை.யில் எம்டெக் பயோ-டெக்னாலஜி படிப்பில் 45 இடங்கள் உள்ளன.
பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியது. ஆனால், அதற்கு தமிழக அரசு மறுத்துவிட்டது. அண்ணாபல்கலை. மற்றும் இதர பல்கலைக்கழகங்களில் 69 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில்தான் மாணவர்சேர்க்கை நடைபெறும். ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் மத்தியகல்வி உதவித்தொகையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று மத்திய கல்வி அமைச்சருக்கு தமிழக முதல்வர் ஓரிரு நாட்களில் கடிதம் எழுத உள்ளார்.
பொறியியல் படிப்பில் இதுவரை 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் 5,920 அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இந்தமாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் கல்லூரிகளின் இணைப்பு அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
முதல் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் அக்.25-ல் தொடங்கும். உயர்கல்வித் துறை சார்பில் அறிவிக்கப்பட்ட புதிய அரசு கலை அறிவியல் கல்லூரிகள் அடுத்த கல்வி ஆண்டில் தொடங்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
No comments:
Post a Comment