மின்சார வாகன பயன்பாட்டுக்கு சாதகமான கொள்கைகளை உலக நாடுகள் வகுத்து வருகின்றன. ஆனால் மின் வாகனத்தில் நீண்ட தூரப் பயணத்துக்கான மின்சக்தி ஏற்ற முடியாததும், மின்சக்தியை பேட்டரியில் ஏற்றுவதற்கு நீண்ட நேரம் பிடிப்பதும் இதனுடைய குறைகள்.
நொடிப் பொழுதில் எரிபொருள் பங்க்குகளில் பெட்ரோல், டீசலை நிரப்பிக் கொண்டு செல்வதைப் போல மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை சார்ஜ் செய்யும் வசதி இல்லாததும் பெரும் குறையாகவே கருதப்படுகிறது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை விரைவில் சார்ஜ் செய்யும் ஆய்வில் உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் ஈடுபட்டு, அதற்காக கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்து முடிவுக்காக காத்திருக்கின்றன.
ஸ்விஸ் நாட்டைச் சேர்ந்த ஏபிபி நிறுவனம் வெறும் 15 நிமிடங்களில் காரை மின்னேற்றம் செய்யும் விரைவு சார்ஜரைக் கண்டுபிடித்துள்ளது.
டெஸ்லா, ஹூண்டாய் என எந்த நிறுவனத்தின் மின்சாரக் காராக இருந்தாலும் இந்த விரைவு சார்ஜரைப் பயன்படுத்தலாம்.
உலகம் முழுவதும் கடந்த ஆண்டு கரோனா தாக்கம் காலத்திலும் 30 லட்சம் மின்சாரக் கார்கள் விற்பனையாகி உள்ளன. இந்த விரைவு சார்ஜரால், உலகில் உள்ள மின்சாரக் கார்களின் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
"டெரா 360' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த விரைவு சார்ஜர் மூலம் ஏற்றப்படும் மின்சக்தியால் மூன்று நிமிடங்களில் 100 கி.மீ. வேகத்தில் வாகனங்கள் செல்லும் என்று கூறப்படுகிறது.
இந்த வகையிலான சார்ஜர்கள் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அறிமுகமாக உள்ளன.
ஒரே இடத்தில் நான்கு சார்ஜர்களை வைத்து கார்களுக்கு மின்னேற்றம் செய்யும் வசதி இதில் உள்ளது.
கார்களுக்கு 15 நிமிடங்கள் சார்ஜ் செய்யும் வசதி என்பது தற்போதைக்கு பெரும் கண்டுபிடிப்பாக இருந்தாலும், வருங்காலத்தில் வாகன இயக்கத்திலேயே ரீசார்ஜ் ஆகும் பேட்டரி பயன்பாடுதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்பதே உண்மை.
No comments:
Post a Comment