தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில், ஒன்று முதல் எட்டுவரையிலான மாணவ - மாணவியருக்கு, நாளை முதல் வகுப்புகள் துவங்கப்படுகின்றன. 17 மாதங்களுக்கு பின் பள்ளிக்கு வரும், தொடக்க நிலை மாணவ - மாணவியருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாசலில் நின்றுபூங்கொத்து, இனிப்புகள் கொடுத்து, விருந்தினர்களை போலஉபசரிக்க, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் அறிக்கை:கொரோனா காலம் முடிவுக்கு வந்து, மெல்ல மெல்ல ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன.நாளை முதல் பள்ளிகளில், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வரவேற்கிறேன்.
இருண்ட கொரோனா காலம் முடிந்து, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்தை, மாணவ - மாணவியர் அனைவரும் துவங்க இருக்கிறீர்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்.இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும் என்ற நம்பிக்கையுடன், கல்விச் சாலைக்குள் உங்களை ஒப்படைத்துக் கொள்ளுங்கள்.ஒன்று முதல் எட்டு வரையிலான மாணவர்களுக்கு, 600 நாட்களுக்கும் மேலாக வகுப்புகள் நடக்காத நிலை இருந்தது. கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கல்விச் சாலைகளின் கதவுகளை தமிழக அரசு திறந்துள்ளது.இந்த உன்னதமான சேவைக்கும், உழைப்புக்கும் காரணமான அனைவருக்கும் நன்றி.
பள்ளிகளுக்கு ஆர்வத்துடன் வரும் குழந்தைகளுக்கு, உற்சாகமூட்டும் வகையிலும், நம்பிக்கை ஊட்டும் வகையிலும், அவர்களை இன்முகத்துடன் வரவேற்பது அனைவரின் கடமை.மாணவச் செல்வங்களுக்கு வரவேற்பு அளிக்குமாறு, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதை போல வரவேற்பு கொடுங்கள்.
முதல் இரு வாரங்கள் மாணவர்களுக்கு உற்சாகமும், நம்பிக்கையும் ஊட்டும் வகையில், கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான விளையாட்டு உத்திகள் போன்றவற்றை ஆசிரியர்கள் வழங்க வேண்டும்.
என் வேண்டுகோளை ஏற்று, மாணவர்கள் பள்ளிக்கு வரும் நாளை இனிய நாளாக மாற்றுங்கள். கொரோனா விதிகளை பின்பற்றி, வரவேற்பு கொடுங்கள். இனிப்புகள் வழங்குங்கள்; மலர் கொத்துகளையும் வழங்கலாம்.எதை வழங்கினாலும் அதோடு அன்பையும், அரவணைப்பையும், நம்பிக்கையையும் சேர்த்து வழங்குங்கள்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
இரு வாரங்களுக்குமனமகிழ்ச்சி பாடம்!
மாணவர்களுக்கு, முதல் 15 நாள், மகிழ்ச்சிக் கான நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வகுப்பறைகளில் ஆர்வத்தை வரவழைக்க, மனமகிழ்ச்சி செயல்பாடுக்குரிய வழிகாட்டுதல், புத்தாக்க பயிற்சி கட்டகங்கள்ஆகியவை பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகள் திறந்து முதல் 10 அல்லது 15 நாட்களுக்கு, மாணவர்களுக்கு மனமகிழ்ச்சி ஏற்படுத்த, கதை, பாடல், விளையாட்டு, வரைதல், வண்ணம் தீட்டுதல், அனுபவ பகிர்வு, கலந்துரையாடல் உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
தொடர்ந்து, 45 நாட்களுக்கு பயிற்சி கட்டகங்களால் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
இதில், முந்தைய வகுப்பு பாடங்கள் சுருக்கமாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, எட்டாம் வகுப்பு பயிற்சி கட்டகத்தில், ஆறாம் வகுப்பு வரை உள்ள அடிப்படை கருத்து, ஏழாம் வகுப்பின் முக்கிய பாட கருத்துகளை உள்ளடக்கியதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்கான வழிகாட்டுதல் நெறிமுறை உத்தரவுகளை, தொடக்க கல்வி இயக்குனரகம், அனைத்து வகை பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளது.
No comments:
Post a Comment