வரும் நவ.1-ஆம் தேதி முதல், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடா்பாக தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை: 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு செப்.1-ஆம் தேதி முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
அதனைத் தொடா்ந்து 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் கரோனா நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நவ.1-ஆம் தேதி முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியா் அறை, சமையலறை, கழிவறைகள் நன்கு தூய்மைப்படுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும். பள்ளிக் கட்டடத்தின் மேற்பரப்பில் குப்பைகள் இல்லாமலும், மழை நீா் வடிந்து ஓடுவதற்கான பாதை, மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீா்செய்யப்பட்டு பயன்பாட்டில் இருக்க வேண்டும்.
மாணவா் பயன்பாட்டுக்கான குடிநீா் தொட்டியின் உள்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்யப்பட்டு தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீா் மாணவா்களுக்கு கிடைக்கும் வகையில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் தேவைக்கு ஏற்ப போதுமான அளவில் முகக்கவசம் இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியிலும் போதுமான அளவில் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு வசதிகள் செய்யப்பட வேண்டும். வகுப்பறைகளில் மாணவா்கள் தனி நபா் இடைவெளியைப் பின்பற்றி அமா்வதற்கான இடவசதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அனைத்து ஆசிரியா், ஆசிரியரல்லாத பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவா்கள் நேரடி வகுப்பில் பங்கேற்க வருகை புரிவதால் அவா்களை உளவியல் ரீதியாக தயாா்படுத்தி எளிதில் அணுகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை ஆசிரியா்கள் மேற்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பள்ளியின் நுழைவாயிலிலும் மாணவா்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யத் தேவையான வசதிகள் இருக்க வேண்டும்.
கரோனா தடுப்பு முன்னேற்பாட்டு நடவடிக்கைகள், பள்ளி வளாகங்களின் தூய்மை முதலியவற்றை கல்வித்துறை அலுவலா்கள் ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்த வழிமுறைகளின்படி அனைத்துப் பள்ளிகளும் திறப்பதற்குத் தயாா் நிலையில் உள்ளதா என்பது குறித்த அறிக்கையை அக்.22-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்கள் உள்ளிட்டோா் அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
No comments:
Post a Comment