'தமிழகத்தில் போக்குவரத்து துறை ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல், மாணவர்களை அழைத்து செல்லும் வாகனங்கள் முடக்கப்படும்' என, போக்குவரத்து துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
தமிழகத்தில் இம்மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு, 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிகளை திறப்பது குறித்து, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்களை அழைத்து வர, தனியார் பள்ளிகள் பயன்படுத்தும் வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய, போக்குவரத்து துறை கமிஷனர் சந்தோஷ் மிஸ்ரா, 16ம் தேதி, ஆர்.டி.ஓ.,க்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி, அந்தந்த ஆர்.டி.ஓ.,க்களின் எல்லையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
கல்வித் துறை, போலீஸ், போக்குவரத்து துறை அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு, ஒரு வாரமாக தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அவற்றில், வேகக்கட்டுப்பாட்டு கருவி, அவசர வழி திறப்பு, முதலுதவி பெட்டி, தீயணைப்பான்கள் உள்ளிட்டவை உள்ளனவா;
முறையாக பராமரிப்பில் உள்ளதா; அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர், உதவியாளர் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். குறைபாடுள்ள வாகனங்கள், மறு ஆய்வுக்கு அழைக்கப்படுகின்றன.
இதுகுறித்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் பள்ளிகள்திறக்கப்பட்டாலும், பல பள்ளி வாகனங்கள் இன்னும் இயக்கப்படவில்லை. இதனால், 15 சதவீத பஸ்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளன. மாணவர்களின் நலன் தான் முக்கியம் என்பதால், மற்ற பஸ்களையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளோம். ஆய்வு செய்யாத பஸ்கள் இயக்கப்பட்டால் சிறைபிடிக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment