கல்லூரிகளில் தேர்வெழுத கரோனா தடுப்பூசி அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Tuesday, September 7, 2021

கல்லூரிகளில் தேர்வெழுத கரோனா தடுப்பூசி அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை

கல்லூரிகளில் தேர்வெழுத கரோனா தடுப்பூசி அவசியம்: புதுவை ஆளுநர் தமிழிசை கல்லூரிகளில் தேர்வு எழுத தடுப்பூசி அவசியம் என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவுறுத்தினார். புதுவை லாஸ்பேட்டை தாகூர் அரசு கலைக்கல்லூரியில் கரோனா நினைவுத் தோட்டம், திறந்தவெளி வகுப்பறை தொடக்க விழா இன்று நடந்தது. 
 
விழாவில் பங்கேற்ற ஆளுநர் தமிழிசை, கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோட்டங்களைப் பார்வையிட்டார். அங்கிருந்த மரங்கள் பற்றிக் கல்லூரி முதல்வர் சசிகாந்த தாஸ் விளக்கினார். பின்னர் கரோனா நினைவுத் தோட்டத்தை ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர் திறந்தவெளி வகுப்பறையைத் தொடங்கி வைத்து மாணவர்களோடு கலந்துரையாடினார். அதன்பின் ஆளுநர் தமிழிசை கூறும்போது, ''அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கல்லூரி மாணவர்கள் 70 சதவீதத்தினர் தடுப்பூசி போட்டுள்ளனர். இது 100 சதவீதமாக உயர வேண்டும். மாணவர்கள் தடுப்பூசிக்குப் பிரச்சாரகர்களாக மாற வேண்டும். எல்லோரும் தடுப்பூசி போட வேண்டும். நோயற்ற புதுவையை உருவாக்க வேண்டும். 
 
கல்லூரி தொடங்க 2 மாதங்களுக்கு முன்பே ஆசிரியர்களும், மாணவர்களும் தடுப்பூசி போட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். அதை உதாசீனப்படுத்திவிட்டு தற்போது தனியார் கல்லூரியில் மூவருக்கு கரோனா வந்துள்ளதாகக் கூறுவதை ஏற்க முடியாது. கரோனாவில் இருந்து நம்மைப் பாதுகாக்க நிரந்தரத் தீர்வு தடுப்பூசிதான். தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு கரோனா வந்தாலும் பெரிய அளவில் பாதிக்காது. கரோனா 3-வது அலையைத் தடுக்க தடுப்பூசிதான் ஒரே தீர்வு. கல்லூரிகளில் துறைத் தலைவர்களிடம், மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுள்ளார்களா என்ற விவரத்தைக் கேட்கும்படி கூறியுள்ளோம். தொடர்ந்து தடுப்பூசி பிரச்சாரம் செய்தும், அதைக் கேட்காவிட்டால் மன்னிப்பில்லை. தடுப்பூசி போட்டால்தான் மாத ஊதியம் தரக்கூடிய சூழல் இருக்க வேண்டும். அதேபோல் கல்லூரிகளில் மாணவர்கள் தேர்வு எழுதச் செல்ல தடுப்பூசி செலுத்தினால்தான் நுழைவுச் சீட்டு வழங்க வேண்டும் எனக் கொண்டுவரலாம். இப்படிக் கட்டாயப்படுத்துவது வருத்தமளிக்கிறது. எனினும் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தேர்வு எழுத தடுப்பூசி அவசியம்" என்று தெரிவித்தார். 
 
ஒருமுறை வரும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த அறிவுரை முன்னதாக, திறந்தவெளி ஆங்கில வகுப்பறையைத் தொடங்கிவைத்து ஆளுநர் தமிழிசை மாணவர்களோடு பேசும்போது, "புதுவை பசுமையாக மாற மாணவர்கள் முயல வேண்டும். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மரத்தை நட வேண்டும். ஏனெனில் ஒரு வேப்ப மரம் 4 ஏசிக்களின் குளுமையைத் தரும் எனச் சொல்கின்றனர். இயற்கை வகுப்பறை மாணவர்களுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். அதேவேளையில் மரங்களின் சலசலப்பு, காற்று, பூக்களின் மனம் நம்மைத் தாலாட்டவும் செய்யும். யாரும் தூங்கிவிடாமல் கல்வி கற்க வேண்டும். ஆதிகாலத்தில் மரத்தடியில்தான் குருக்கள் வகுப்பறைகளை நடத்தினர். அது மீண்டும் திரும்பியுள்ளது. மாணவர்கள் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நான் கேள்வி கேட்கும்போது தயங்கித் தயங்கி ஒரு சிலர் மட்டும் பதில் கூறுகின்றனர். வாய்ப்புகள் சிலமுறைதான் கதவைத் தட்டும். அதை முழுமையாகப் பயன்படுத்துங்கள்" என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment