வரதட்சணை வாங்கமாட்டோம் என உறுதி கொடுத்தால் மட்டுமே இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று கோழிக்கோடு பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், இந்த உறுதிமொழியை மீறினால் பட்டத்தைத் திரும்பப் பெறலாம் என்று மாணவரிடம் கையெழுத்து பெறப்பட உள்ளது.
இதுகுறித்துக் கோழிக்கோடு பல்கலைக்கழகத் துணைப் பதிவாளர், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரி முதல்வர்களுக்குச் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''கேரளாவில் அண்மையில் வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட குடும்ப வன்முறையால் மரணங்கள் அடிக்கடி நிகழ்ந்து வந்ததை அடுத்து, பல்கலைக்கழகத் துணைவேந்தர் இந்த யோசனையை முன்மொழிந்துள்ளார். அதன்படி, பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அனைத்துக் கல்வி நிறுவனங்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.
இதற்காகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மாணவர் சேர்க்கையின்போது மாணவர்களிடமும், பெற்றோரிடமும் உறுதிமொழிப் படிவத்தைப் பெறவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
அந்தப் படிவத்தில் ஒவ்வொரு மாணவரும், பெற்றோரும், கல்லூரியில் சேரும்போது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வரதட்சணை கேட்கவோ, கொடுக்கவோ, பெறவோ மாட்டேன் என்று உறுதியளிக்க வேண்டும்.
2021-22ஆம் கல்வி ஆண்டில் ஏற்கெனவே சேர்ந்துள்ள மாணவர்களிடமும் இந்த உறுதிமொழிப் படிவத்தைப் பெற வேண்டியது அவசியம். இந்த உத்தரவு பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கும் பொருந்தும்''.
இவ்வாறு அந்தச் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், மாணவர் உறுதிமொழிப் படிவத்தில், உறுதிமொழியை மீறி நான் வரதட்சணை வாங்கினால் எனது பட்டத்தைத் திரும்பப் பெறலாம், பட்டமே அளிக்காமல் இருக்கலாம், மாணவர் சேர்க்கையை ரத்து செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment