பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய வெஸ்டிங்ஹவுஸ் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Monday, September 20, 2021

பல கண்டுபிடிப்புகளை உருவாக்கிய வெஸ்டிங்ஹவுஸ்

நியூயார்க் நகரில் 1846-ல் பிறந்தவர்தான், வெஸ்டிங்ஹவுஸ். இவர் அதிகம் கொண்டாடப்படாத மேதை. தொழில் முனைவோர். எந்திரங்களின் மீதான காதல் அவரை ஒரு கண்டுபிடிப்பாளராக மாற்றியது.


தனது 19-வது வயதில் சுழலும் நீராவி என்ஜின் ஒன்றை வடிவமைத்து காப்புரிமை பெற்றதில் இருந்து, அவரது காப்புரிமை பயணம் தொடங்கியது. அதன் பின்னர் உழவு டிராக்டர், தடம்புரண்ட ரெயில் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் ஏற்றும் கருவி ஆகியவற்றையும் கண்டுபிடித்தார். ரெயில் மீதான இவரது காதல், அதன் தொழில்நுட்பத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. அழுத்தப்பட்ட காற்றால் செயல்படுகிற அமைப்பு மூலம் ரெயில் சக்கரத்தில் உராய்வு ஏற்பட்டு நிறுத்தப்படும் அமைப்பை வெஸ்டிங்ஹவுஸ் வடிவமைத்தார். அழுத்தப்பட்ட காற்றைச் சேமிக்கிற ஒரு கலன், பெட்டிகளுக்கு அழுத்தப்பட்ட காற்றை எடுத்துச் செல்லும் குழாய் அமைப்புகள், கலனில் இருந்து காற்றைச் சக்கரங்களுக்கு அருகில் இருக்கும் பிரேக் அமைப்புகளுக்குத் திருப்பும் வால்வு அமைப்புகளுடன் அந்த அமைப்பு உருவாக்கப்பட்டு இருந்தது. 

காற்று எடுத்துச்செல்லும் குழாய் அமைப்பில் பழுது ஏற்பட்டால், ரெயில் பெட்டி சக்கரங்களில் பிரேக் செயல்பட்டு தானாக நிற்கும். வெஸ்டிங்ஹவுஸின் இந்த கண்டுபிடிப்பு ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றியது. ரெயில்களில் இந்த பிரேக் அமைப்பு கண்டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்று அரசு சட்டம் இயற்றியது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தடத்திலும் ரெயில்களின் போக்குவரத்தை அதிகாரிகளுக்கும் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கும் அறிவிக்கும் அமைப்பு ஒன்றையும் வடிவமைத்தார். ரெயில்வே துறையோடு நின்றுவிடாமல், குழாய்கள் பதித்து மக்களுக்கு எரிவாயு விநியோகித்தல், தொலைபேசி அழைப்புகளைச் சரியான தடத்தில் இணைத்தல் ஆகியவற்றிலும் அவர் முத்திரை பதித்தார். 

 நெடுந்தூரம் கடந்துவரும் மாறுதிசை மின் மின்வினியோகம் அன்றைக்கு இல்லை. மாறாகப் பயன்படுத்தப்படும் இடத்துக்கு அருகிலேயே மின்சாரத்தை உற்பத்திசெய்து வினியோகித்த நேர்திசை மின் அமைப்புகள் குறைந்த அளவில் இருந்தன. ஆனால், ஐரோப்பாவின் சில இடங்களில் மாறுதிசை மின்வினியோகம் வெற்றிகரமாக நடப்பதை அறிந்த வெஸ்டிங்ஹவுஸ், மாறுதிசை மின்மோட்டாருக்கான உரிமத்தை டெஸ்லாவிடம் இருந்து பெற்றார். அதன் முக்கிய கருவியான மின்மாற்றியின் வடிவத்தை மேம்படுத்தினார். குறைந்த மின் இழப்பில் நெடுந்தூரம் பயணிக்கக்கூடிய வகையில், அதிகத்திறன் கொண்ட மாறுதிசை மின்வினியோகத்தை வெஸ்டிங்ஹவுஸ் வடிவமைத்தார். 


இதன் மூலம் உலகப்புகழ் பெற்ற சிகாகோ உலகக் கண்காட்சியில் மின்சாரம், விளக்குகள் ஆகியவற்றை வழங்கும் வாய்ப்பையும் வெஸ்டிங்ஹவுஸ் பெற்றார். இதன் விளைவாக அவருடைய மின்வினியோக முறை உலகப்புகழ் பெற்றது. இன்றைக்கும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களையும், நீடித்திருக்கும் கண்டுபிடிப்புகளையும் வெஸ்டிங்ஹவுஸ் விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய பெயரில் 100 காப்புரிமைகள் இருந்தன. அதிகம் வெளிச்சத்துக்கு வராத, ஆனால் தொழில்நுட்பத்தில் மிக முக்கியமான ஆளுமையாக வெஸ்டிங்ஹவுஸ் இருந்திருக்கிறார்.

No comments:

Post a Comment