சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கையைப் பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்
அரவிந்தர், பாரதி, வஉசி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கட்டபொம்மன் போன்ற இந்திய சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாழ்க்கையை அனைத்து மாநிலக் கல்வித்துறைகளும் பாடத்திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.
புதுச்சேரி பிள்ளைச்சாவடியில் 280 ஏக்கரில் புதுச்சேரி அரசு பொறியியல் கல்லுாரி அமைந்துள்ளது. கடந்த 1986-ம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 35 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இந்தக் கல்லுாரி தன்னாட்சி அந்தஸ்துடன் இருந்தது. ராஷ்ட்ரீய உச்சதர் சிக்சா அபியான் (ரூசா) திட்டத்தின் கீழ், தன்னாட்சி அந்தஸ்து பெற்ற சிறந்த கல்லுாரிகள் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ், புதுச்சேரி பொறியியல் கல்லுாரியைத் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமாகத் தரம் உயர்த்த, மத்தியக் கல்வி அமைச்சகம் தேர்வு செய்தது. தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் தொடங்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தார்.
அதைத் தொடர்ந்து அரசிதழில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கிவைத்தார்.
அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது:
’’புதுச்சேரியின் முதல் மாநிலப் பல்கலைக்கழகம் இது. பொறியியல் கல்லூரி தற்போது பல்கலைக்கழகமாகத் தரம் உயர்ந்துள்ளது. இதனால் அதிக வாய்ப்புகள் உருவாகும். புதிய படிப்புகள் தொடங்க முடியும். புதிய கண்டுபிடிப்புகள் மூலம் நாடு முன்னேறி வளம் பெற்று, மக்கள் மகிழ்ச்சி பெறுவதும் அவசியம்.
வளர்ந்த நாடுகள் ஆராய்ச்சிகளில் கவனம் செலுத்துகின்றன. இந்தியா வளர்ந்து வரும் நாடாக உள்ளபோது பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு, வறுமை ஆகியவற்றையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக இங்கு 23 சதவீதத்தினர் ஏழ்மை நிலையில் உள்ளனர். அது மிகப்பெரிய சவால். அவர்களை மேம்படுத்தி வாய்ப்புகளை உருவாக்கித் தரவேண்டும்.
சுதந்திரத்துக்குப் பிறகு அனைவருக்கும் கல்வியறிவு அளிக்கத் திட்டம் கொண்டு வரப்பட்டும், தற்போதும் 20 சதவீத மக்கள் கல்வி கற்காத சூழலில் உள்ளனர். அத்துடன் பாலினப் பாகுபாடு, சமூகத்தில் மக்களிடத்தில் பாகுபாடு ஆகியவை முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். அனைவருக்கும் சமமான வாய்ப்பு தரப்பட வேண்டும்.
தற்போது பருவநிலை மாற்றம் வளர்ந்த நாடுகளில் பெரும் பாதிப்பாக உள்ளது.
குறிப்பாக வெப்பநிலை உயர்வு, வெள்ளம் ஆகியவை அதிகரித்துள்ளன. பிரான்ஸில் நடந்த மாநாட்டில் பருவநிலை மாற்றம் குறித்து விவாதித்தபோது, அனைவரும் இயற்கைச் சூழலைக் காக்க ஒன்றுபட வலியுறுத்தப்பட்டது.
இதனால் நாம் வேர்களைத் தேடிச் செல்லவேண்டும். ஆரோக்கியமான உணவு, இயற்கையுடன் இணைந்த வாழ்வு, கலாச்சாரம் ஆகியவை எதிர்காலத்துக்குத் தேவையாகும். குறிப்பாக பீட்சா, பர்கர் நம் சூழலுக்கு உகந்தது அல்ல. நம் உணவே சிறந்தது. உடற்பயிற்சி அவசியம். அதனால் மனவளம் மேம்படும். இன்குபேஷன் மையம் மூலம் புதிய கண்டுபிடிப்புகள் வரவேண்டும். பெண்களுக்குச் சமவாய்ப்பு தரவேண்டும். ஆண், பெண் பாகுபாடு கூடாது.
உலக அளவில் இலவசத் தடுப்பூசி இந்தியாவில்தான் நடக்கிறது. தேர்தலில் பூத் சிலிப் தருவதுபோல் மக்கள் பிரதிநிதிகள் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்த, கட்சிகளைத் தாண்டிப் பணியாற்றுவது அவசியம்.
நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத் தியாகிகளான அரவிந்தர், பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், கட்டபொம்மன் ஆகிய முக்கியத் தலைவர்களின் வாழ்க்கையை மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியம். இவை பாடநூலில் இடம் பெறவேண்டும். தங்களின் வாழ்க்கை விவரங்களை ஆங்கிலேயர்கள் பாடத்திட்டத்தில் இணைத்துவிட்டனர். அவர்கள் நாட்டு வீரர்களை அறிவதை விட நமது நாட்டு வீரர்களை அறிவது அவசியம். மாநில அரசுகள், பல்கலைக்கழகங்கள் நம் நாட்டுத் தியாகிகளின் விவரங்களைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்".
இவ்வாறு வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
இந்நிகழ்வில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, கல்வி அமைச்சர் நமச்சிவாயம், பேரவைத் தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment