அரசுப் பள்ளியின் சுகாதாரத்தைத் தத்தெடுத்த சமூக ஆர்வலர் - Kalviupdate

Latest

1-5 std guideCLICK HERE
9 std guide CLICK HERE
10 std guideCLICK HERE
11 std guideCLICK HERE
12 std guideCLICK HERE

Thursday, September 30, 2021

அரசுப் பள்ளியின் சுகாதாரத்தைத் தத்தெடுத்த சமூக ஆர்வலர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அழகர்சாமி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சுகாதாரத்தை முழுமையாகப் பராமரிக்கும் பணியைத் தத்தெடுத்து சமூக சேவை செய்யும் மற்ற தன்னார்வலர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறார். 

 விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாகச் சமூகப் பணிகளைச் செய்து வருகிறார் அழகர்சாமி. கிராமப் பெண்கள் மேம்பாட்டுத் திட்டம், கிராமப் பெண்கள் சுகாதாரத் திட்டம், கிராமப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் என்று பல்வேறு திட்டங்களைத் தனி ஒருவராக நின்று செயல்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற பணிகளுக்காகத் தமிழக முதல்வர் விருதும் பெற்றிருக்கிறார் 

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடகாலமாக கரோனா காலத்தில் மக்களைப் பாதுகாக்கும் பணியில் பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார்.‌ உதாரணமாக இதுவரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முகக்கவசங்களையும் 1000-க்கும் மேற்பட்ட சானிடைசர் பாட்டில்களையும் இலவசமாக வழங்கி இருக்கிறார். தற்போது தமிழகமெங்கும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் சுகாதாரத்தைப் பராமரிப்பதற்கு காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியை முழுவதுமாகத் தத்தெடுத்துள்ளார். 

 இதுகுறித்து அழகர்சாமி கூறும்போது, ''தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. விரைவில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளும் திறக்கப்படும். அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.‌ இந்த நிலையில் மாணவர்களின் சுகாதாரத்தையும், சுத்தத்தையும் பராமரிப்பது மிக அவசியம். எனவே மாணவர்களுக்குத் தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க முடிவு செய்திருக்கிறேன்.‌ 

அந்த வகையில் இப்போது பள்ளிக்குத் தேவையான முகக் கவசங்களையும் சானிடைசர் பாட்டில்களையும் வழங்கியிருக்கிறன். பள்ளி வளாகத்தைச் சுத்தப்படுத்துதல், பள்ளி வளாகத்தில் கிருமிநாசினி தெளித்தல் போன்றவற்றையும் செய்து இருக்கிறோம். இது ஒரு முறையோடு மட்டும் நின்றுவிடாமல், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் குறைந்தபட்சம் மாதம் ஒருமுறை இப்பணிகளை இதே பள்ளியில் மேற்கொள்ள இருக்கிறேன்.‌ இதனால் மாணவர்களிடையே தொற்று பரவாமல் பாதுகாக்க முடியும்’’ என்று தெரிவித்தார். ஒவ்வொரு ஊரிலும் செயல்படும் சமூக ஆர்வலர்கள் இதுபோலப் பள்ளியைத் தத்தெடுத்து சுகாதாரத்தைப் பராமரித்தால், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

No comments:

Post a Comment