பல அடுக்குப் பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றி தொடக்கப் பள்ளிகள் முதல் படிப்படியாகத் திறக்கலாம்: ஐசிஎம்ஆர் வல்லுநர்கள் கருத்து
பல அடுக்குப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தொடக்கப் பள்ளிகள் முதல் படிப்படியாகத் திறக்கலாம் என்று ஐசிஎம்ஆர் அமைப்பின் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில், யுனெஸ்கோவின் அறிக்கையைச் சுட்டிக்காட்டி ஐசிஎம்ஆர் வல்லுநர்கள் பள்ளிகள் திறப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளனர். “கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பள்ளிகளைத் திறத்தல்: ஒரு நிலையான குழப்பம்” என்ற தலைப்பில் கட்டுரை எழுதப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''யுனெஸ்கோ அறிக்கையின்படி, கடந்த 500 நாட்களுக்கும் மேலாக உலக அளவில் 32 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை. சில வார்த்தைகளைக் கூட கற்கமுடியாமல் இருக்கும் விளிம்பு நிலை சமூகத்தில் இருக்கும் குழந்தைகள், ஏழ்மையில் இருக்கும் குழந்தைகள், மலைப்பகுதிகளில், தகவல் தொடர்பு இல்லாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பள்ளிகள் திறக்காமை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் இருப்பதால், சமூகத்தின் தொடர்பை இழந்து தவிக்கிறார்கள். உடல்ரீதியான செயல்பாடுகள், நண்பர்களுக்கு இடையே பிணைப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சாத்தியங்கள் குறித்து இந்தியாவிலும் வெளிநாட்டிலிருந்தும் அறிவியல் சான்றுகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. வல்லுநர்கள் தரப்பில், “கரோனா வைரஸ் பரவுதல் அதிகமாகப் பரப்பிவிடப்பட்ட ஒரு நிகழ்வு, பள்ளிகளில் பலகட்டப் பரிசோதனை, பாதுகாப்பு உத்திகள் மூலம் கரோனா பரவலைத் தடுக்க முடியும்.
இந்தியச் சூழலுக்கு ஏற்ப கரோனா காலத்துக்கு முன்பு இருந்ததைப் போன்று பள்ளிக் கல்வி முறையை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளிகளைத் திறக்கும் முடிவை அறிவிப்பதற்கு முன்பாக, கரோனா அலைகள் இதற்கு முன்பு உருவாகியபோது, மாவட்ட ரீதியாக, மாநில ரீதியாக இருக்கும் புள்ளிவிரங்களை ஆய்வு செய்தும், வயதுவந்த பிரிவினர் எத்தனை சதவீதம் தடுப்பூசி செலுத்தியுள்ளார்கள் எனவும் கண்டறிய வேண்டும்.
அதன்பின் பள்ளிகள் திறப்பை அறிவிக்கலாம்.
ஏற்கெனவே இருக்கும் வழிமுறைகளைப் பயன்படுத்தி பள்ளிக் கூடங்களில் ஆன்-சைட் பரிசோதனையை நாடலாம். உள்ளூரில் கரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு பள்ளிகள் திறப்பு, வகுப்புகளை நடத்துவது குறித்து முடிவு எடுக்கலாம்.
பள்ளிகள் திறக்கப்படும்போது, ஆசிரியர்கள், ஊழியர்கள், குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச் செல்லும் ஊழியர்கள் கண்டிப்பாகத் தடுப்பூசி செலுத்தியிருப்பதை இறுதி செய்ய வேண்டும். முகக்கவசம் கட்டாயம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி இந்தியாவில் இன்னும் பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது. ஆய்வுகள், ஆதாரங்கள் அடிப்படையில் 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கரோனாவில் அதிகமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆதலால், அவர்களுக்கு முன்னுரிமை அளித்து தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும்.
பள்ளிகள் திறப்பு மூலம் அதிகமான பலன்களைப் பெற வேண்டுமென்றால், கற்கும் குழந்தைகளுக்கு கரோனா பரவல் ஏற்படாமல் இருக்க பல அடுக்குப் பாதுகாப்புச் சூழலை உருவாக்கலாம். முறையான முகக்கவசம் அணிதல், சானிடைசர் அடிக்கடி பயன்படுத்துதல், கைகளைக் கழுவுதல், ஆகியவை கரோனா பரவலைத் தடுக்கும் முக்கியக் காரணிகள். இதை மாணவர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
5 வயதுக்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு முகக்கவசம் பரிந்துரைக்கப்பட வில்லை. 6 முதல் 11 வயதுள்ள குழந்தைகள் அவர்களின் திறனைப் பொறுத்து, பாதுகாப்பாக முகக்கவசத்தை அணியலாம்.
பள்ளிகளில் வகுப்பறைகள் காற்றோட்டமாக இருக்க வேண்டும். ஏசி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். வகுப்பறைகளில் காற்றை வெளித்தள்ளும் எக்ஸ்ஹாஸ்ட் பேன் பொருத்துவது கரோனா பரவலைக் குறைக்கும். மாணவர்கள் உணவுகளைப் பகிர்ந்துகொள்ளக் கூடாது. கேண்டீன், உணவு உண்ணும் அறைகளில் நீண்ட நேரம் செலவிடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும்''.
இவ்வாறு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment