உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு; பணம், பரிசுப் பொருள் விநியோகத்தை கண்காணிக்க பறக்கும் படைகள்: மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைகிறது.
இதையடுத்து, பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகத்தை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் விடுபட்டுப்போன காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிஅமைப்புகளுக்கு வரும் அக்.6,9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதர மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களில் 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,381 ஊராட்சி ஒன்றிய வார்டுஉறுப்பினர்கள், 2,901 கிராம ஊராட்சித் தலைவர்கள், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 27,003 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது.
மேலும், 9 மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், 74 ஊராட்சி ஒன்றியத்தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகள், 2,901 கிராம ஊராட்சிதுணைத் தலைவர்கள் என மொத்தம் 3,067 பதவிகளுக்கு அக்.22-ல் மறைமுகத் தேர்தல் நடக்கிறது.
READ THIS ALSO பணியில் உள்ளவர்களுக்கு பிரத்யேகமாக சென்னை ஐஐடி-யில் எம்பிஏ படிப்பு: அக்.19-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கியது. நேற்றுமுன்தினம் வரை 53,045 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று முன்தினம் மட்டும் சுமார் 34 ஆயிரம் பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
64 ஆயிரம் மனுக்கள்
நேற்று மட்டும் 10,254 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதுவரை கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 48,635, கிராம ஊராட்சித் தலைவர் பதவிக்கு 11,393, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 3,912, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 359 என மொத்தம் 64,229 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இறுதி நாள்என்பதால் இன்று ஆயிரக்கணக்கானோர் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மனு தாக்கல் செய்யும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை (23-ம் தேதி) மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. மனுக்களை திரும்பப் பெற 25-ம் தேதிகடைசி நாளாகும். அன்று மாலைஇறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அத்துடன், வேட்பாளர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.
இரண்டு கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்.12-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், தேர்தல் நடக்கும்மாவட்டங்களில் பணம் மற்றும்பரிசுப் பொருட்கள் சட்டவிரோதமாக விநியோகிக்கப்படுவதை தடுக்க, பறக்கும் படைகளை அமைக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில தேர்தல்ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஒன்று முதல் மூன்று ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கிய ஒவ்வொரு தொகுப்புக்கும் ஒரு பறக்கும் படை என்ற வீதத்தில், ஓர் செயற்குற்றவியல் நீதிபதி மற்றும் 3 காவலர்கள் கொண்ட பறக்கும் படை அமைக்க வேண்டும். தேர்தல்நடத்தை விதிகள் அமலில் உள்ளவரை 24 மணி நேரமும் இயங்கும் வகையில், 8 மணி நேரத்துக்கு ஒரு ஷிப்ட் என்ற அடிப்படையில் பறக்கும் படைகளை தேர்தல் அலுவலர்கள் அமைக்க வேண்டும்.
நடத்தை விதிகளை மீறுதல், அச்சுறுத்தல், மிரட்டுதல், சமூக விரோத செயல்கள், வாக்காளர்களுக்கு மது மற்றும் அதிக அளவில் பணம் லஞ்சமாக வழங்குதல் தொடர்பான புகார்கள் மீது முழு கவனம் செலுத்துவது பறக்கும் படைகளின் கடமையாகும். வேட்பாளரோ, அவரது முகவரோ, கட்சித் தொண்டரோ உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்குமேல் பணத்தை வாகனத்தில் எடுத்துச் சென்றால் அதை பறிமுதல் செய்ய வேண்டும்.
மேலும், ரூ.10 ஆயிரத்துக்குமேல் மதிப்புள்ள விளம்பரத் தட்டிகள், தேர்தல் பொருட்கள், மது உள்ளிட்ட போதைப் பொருட்கள், ஆயுதங்கள், பரிசுப் பொருட்கள் ஆகியவற்றை எடுத்துச் சென்றால் அவற்றை பறக்கும் படைகள் பறிமுதல் செய்ய வேண்டும். பறக்கும் படைகளின் ஆய்வு, பொருட்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும்.
பறிமுதல் செய்யப்படும் பணம் முழுவதும் நீதிமன்ற உத்தரவின்படி, கருவூலத்தில் செலுத்த வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை அலுவலக நேரத்துக்கு பின்பும், விடுமுறை நாட்களிலும் கருவூலத்தில் செலுத்த கருவூல அலுவலகத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித் தலைவர்களால் தேவையான அறிவுரை வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment