யுபிஎஸ்சி: பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு ஓபிசியை விட மீண்டும் குறைந்த கட்-ஆஃப்
யுபிஎஸ்சி தேர்வில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஓபிசி பிரிவினரைக் காட்டிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்குக் குறைவான கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
குடிமைப் பணிகளில் கடந்தாண்டு காலியாக இருந்த 836 பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு அக்டோபரிலும் முதன்மைத் தேர்வுகள் கடந்த ஜனவரியிலும் நடத்தப்பட்டிருந்தன. கரோனா தொற்றின் 2-ஆவது அலை பரவல் காரணமாக ஆளுமைத் திறன் தேர்வு தாமதமாக நடத்தப்பட்டது.
ஆளுமைத் தேர்வு கடந்த 22-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், குடிமைப் பணித் தேர்வுக்கான இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளார் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதில் 761 பேர் தேர்வாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவில் 86 பேர் தேர்வாகியுள்ளனர். கடந்தாண்டு பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவில் 78 பேர் தேர்வாகியிருந்தனர்.
தொடர்ந்து, இரண்டாவது ஆண்டாக இதர பிற்படுத்தப்பட்டோருக்கான (ஓபிசி) கட் ஆஃப் மதிப்பெண்-ஐக் (907) காட்டிலும் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான கட் ஆஃப் மதிப்பெண் (894) குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி. வில்சன் இதுபற்றி கூறுகையில், "இடஒதுக்கீட்டால் பயனடையும் பிரிவினர் ஏராளமான வேலைகளை எடுத்துக்கொள்கின்றனர் என்பதுதான் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பிரிவின் ஆதரவாளர்கள் வைக்கும் வாதம். அப்படி இருக்கையில் தற்போது ஓபிசியைக் காட்டிலும் குறைவான தகுதியையுடைய முற்பட்ட வகுப்பினருக்கு எப்படி இடஒதுக்கீடு வழங்க முடியும்?
அறிவியல்பூர்வமாகப் போதிய தரவுகள் இல்லாத காரணத்தினால் மராத்தா இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இடஒதுக்கீட்டுக்கு எவ்வித நியாயமான காரணங்களும் இல்லை" என்றார் அவர்.
பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் கூறுகையில், "பொதுப் பிரிவில் வாய்ப்புகள் இழந்தவர்களுக்குத் தற்போது பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான இடஒதுக்கீடு மூலம் புதிய கதவுகள் திறக்கப்படுகின்றன. பல தலைமுறைகளாக அரசுப் பணிகளே கிடைக்காமல் இருக்கும் பல சமூகங்களைச் சேர்ந்த ஏழைகள் இதன்மூலம் பயனடைவர்" என்றார். கட் ஆஃப் மதிப்பெண் பற்றி கருத்து கூற அவர் மறுத்துவிட்டார்.
சேலத்தைச் சேர்ந்த யுபிஎஸ்சி பயிற்சியாளர் எஸ். சிவலிங்கம் இதுபற்றி பேசுகையில், "பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான பிரிவு இல்லையெனில் இந்த 86 இடங்களும் ஓபிசி மற்றும் பொதுப் பிரிவினரால் பகிரப்பட்டிருக்கும். குரூப் 1 பணிகளில் முற்பட்ட வகுப்பினர் இருக்கும் விகிதங்களைக் கணக்கிடாமலே இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உயர் பதவிகளில் இடஒதுக்கீடு மூலம் வருபவர்கள் அதிகரிப்பதைத் தடுப்பதற்கான முயற்சி இது" என்றார் சிவலிங்கம்.
யுபிஎஸ் வாரிய முன்னாள் உறுப்பினர் பாலகுருசாமி கூறுகையில், "இடஒதுக்கீட்டால் பயனடைவோர் பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான குறைந்த கட் ஆஃப் மதிப்பெண்களைக் கை காட்டக் கூடாது. இடஒதுக்கீடு எப்போதுமே தகுதியைக் குறைக்கும். இடஒதுக்கீட்டால் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பலர் வாய்ப்புகளை இழக்கின்றனர். பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கு குறைவான கட் ஆஃப் மதிப்பெண்கள் இருப்பதில் எந்த சட்டவிரோதமும் இல்லை" என்றார் பாலகுருசாமி.
No comments:
Post a Comment