நேரடி வகுப்புக்கு வருமாறு மாணவர்களைக் கட்டாயப்படுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை
நேரடி வகுப்புக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டும் என வற்புறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த அப்துல் வஹாதீன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழகத்தில் கரோனா பரவலால் 2 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் செப். 1 முதல் திறக்கப்பட்டு 9 முதல் 12-ம் வகுப்புகள் வரை நடத்தப்படுகின்றன. இதில், சில பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு மாணவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் எனக் கட்டாயப்படுத்துகின்றனர். சில பள்ளிகளில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.
இருப்பினும் ஆன்லைன் வழிக் கல்வியில் சரியான முறையில் கற்பிக்கப்படுவதில்லை என்று கூறி பெற்றோர்கள் மாணவ, மாணவிகளைப் பள்ளிக்கு அனுப்புகின்றனர். அனைத்து மாணவர்களும் பள்ளிக்குச் செல்வதால் மாணவர்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் வகுப்பறைகளில் அமர்கின்றனர்.
இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை. கரோனா 3-வது அலை குழந்தைகளை அதிக அளவில் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நேரத்தில் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்துவது கரோனா பரவலை அதிகப்படுத்தும். எனவே, தமிழகத்தில் 9 முதல் 12 வரை நேரடி வகுப்புகள் நடத்தவும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்லவும் தடை விதிக்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, கே.முரளிசங்கர் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், ''பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள் கரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பல பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயம் நேரடி வகுப்பிற்கு வரவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
இதையடுத்து, ''''நேரடி வகுப்புக்கு மாணவர்கள் கட்டாயம் வர வேண்டும் என வலியுறுத்தும் பள்ளிகளின் விவரங்களை மனுதாரர் தெரிவித்தால் அந்தப் பள்ளிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். மனு தொடர்பாகப் பள்ளிக் கல்வித்துறைச் செயலர் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணையை செப். 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
No comments:
Post a Comment