இதயத்தைப் பாதுகாத்துக்கொள்ள 8 வழிமுறைகள்! -உலக இதய நாள் இன்று!
இன்று(செப்.29) உலக இதய நாள்
வயது வித்தியாசமின்றி வசிக்கும் பகுதி சாராது, இப்போது மனித இறப்புக்கு முக்கியக் காரணமாக இதய நோய்கள். உலகம் முழுவதும் இதயம் தொடர்பான பிரச்னைகளால் ஆண்டொன்றுக்கு 1.8 கோடி பேர் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.
இதனிடையே கரோனா தொற்று, சுகாதாரத் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத சவாலாக உள்ளது. சுவாசக் கோளாறுகள் முதன்மையாக இருந்தாலும் கரோனா தொற்று, ரத்த நாளங்கள் மற்றும் இதயத் தசைகளில் வீக்கத்தை ஏற்படுத்தும். இதனாலே இதய நோய் உள்ளவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக உள்ளது.
தற்போது தொற்றுநோயின் அடுத்தடுத்த அலைகள் வந்துகொண்டிருப்பதாலும் கரோனா தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராததாலும் உங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் பாதுகாத்துக்கொள்வது அவசியம்.
நீரிழிவு நோய் அல்லது புகைபிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் இருப்பது இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கும். எனவே, நோயற்ற சிறந்த வாழ்க்கைமுறைக்கு உங்கள் இதயத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம்.
ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கைமுறையே இதய நோய்கள் வராமல் தடுக்க உதவும்.
உங்கள் இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும், இதயக் கோளாறுகளைத் தடுக்கவும் இதய நோய் நிபுணர் டாக்டர் விவேக் முத்துக்குமாரசாமி கூறும் வழிமுறைகள்...
தினசரி வழக்கத்தைப் பின்பற்றுங்கள்
உங்கள் நாளுக்கென்ற ஒரு கட்டமைப்பை ஏற்படுத்துவது ஒரு சிறந்த நடைமுறை. நீங்கள் வீட்டில் அதிக நேரம் செலவழித்தாலும், உங்களுடைய தினசரி வழக்கத்தை பின்பற்றுவது முக்கியம். போதுமான அளவு தூக்கம், சரியான நேரத்தில் சீரான உணவு உண்ணுதல், தினசரி பணிகளை சரியாகச் செய்தல், மருந்துகளை சரியான நேரத்தில் உட்கொள்ளுதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும்.
கடினமான காலங்களில் உணர்ச்சிகளையும் மகிழ்ச்சியான மனநிலையையும் பராமரிப்பது மிகவும் அவசியம். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் தொலைபேசி மூலமாக தொடர்பில் இருங்கள். இது உங்கள் மனநிலையை மேம்படுத்துவதுடன், வாழ்க்கையில் மிகச்சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆரோக்கியமான உணவுகளை உண்ணுங்கள்
இதயத்திற்கு ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள். அதிக நார்ச்சத்து, குறைந்த கார்ப்போஹைட்ரேட், குறைந்த கொழுப்புள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதேநேரத்தில், அதிக சோடியம் அல்லது அதிக கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் உட்கொள்ள வேண்டிய உணவுகள் குறித்து மருத்துவரிடம் ஆலோசனை பெறலாம்.
சுறுசுறுப்பாக இருங்கள்
உங்கள் உடல் செயல்பாட்டில் இருப்பது முக்கியம். தொடர்ந்து இருக்கையில் அமர்ந்திருக்காமல் சிறிது இடைவெளியுடன் எழுந்து நடக்க வேண்டும். அவ்வப்போது கால்களை நீட்டி மடக்க வேண்டும். லேசான உடற்பயிற்சியை தினமும் மேற்கொள்ள வேண்டும்.
உங்கள் உடலைப் புரிந்துகொள்ளுங்கள்
ஒவ்வொரு நபருக்கும் தனித்துவமான உடல் உள்ளது. உங்கள் உடலைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். எனவே, உங்கள் உடலைக் கண்காணித்து, உடல்நலத்தில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுவதாக நீங்கள் உணர்ந்தால், உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.
தொலைபேசி/ஆன்லைன் மூலமாக மருத்துவரை அணுகுதல்
தொலைபேசி அல்லது ஆன்லைன் மூலமாக மருத்துவ ஆலோசனை பெறத் திட்டமிடுங்கள்.
ஏனெனில் கரோனா தொற்றுநோயிலிருந்து காத்துக்கொள்ள ஆன்லைன் வழி பயன்பெறுவது பாதுகாப்பானது.
கரோனா முன்னெச்சரிக்கைகள்
கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுங்கள். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது உள்ளிட்டவற்றை தொடர்ந்து பின்பற்றுங்கள்.
நல்ல பழக்கங்கள்
புகைப்பிடித்தல், புகையிலைப் பயன்பாடு, போதைப்பொருள் மற்றும் குடிப்பழக்கம் ஆகியவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நல்ல பழக்கங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
உலக இதய நாளன்று உங்கள் இதயத்தை கவனித்துக்கொள்ள உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். தொற்றுநோயின் இந்த சவாலான காலகட்டத்தில் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு மாறுங்கள். நோயற்ற வாழ்க்கைக்கு இதய ஆரோக்கியம் அவசியம். நோய் வந்தபின்னர் குணப்படுத்துவதைவிட வருமுன் காப்பது சிறந்தது.
No comments:
Post a Comment