அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான 5-ம்கட்ட கணினி பயிற்சி, செப்.22 முதல் 28-ம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநர் சுதன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் பணிகளை சிறந்த முறையில் மேற்கொள்ள ஏதுவாக அடிப்படை கணினி பயன்பாடு மற்றும் தொழில்நுட்ப திறன்வளர் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டது.
அதன்படி கடந்த ஜூலை மாதம் தொடங்கி இதுவரை 4 கட்ட பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த பயிற்சிகளில் பங்கேற்காத அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கான 5-ம்கட்ட பயிற்சி வகுப்புகள் செப்.22 முதல் 28-ம் தேதி வரை நடத்தப்படும். இதில் டிஸ்க்லெக்சியா போன்று மாணவர்களிடம் உள்ள கற்றல் குறைபாடுகளை கண்டறியும் வழிமுறைகளும் ஆசிரியர்களுக்கு கூடுதலாக பயிற்றுவிக்கப்படும்.
தவறாமல் பங்கேற்க வேண்டும்
இதற்கு தேவையான ஆயத்தப்பணிகளை தயாராக செய்துக்கொள்ள வேண்டும். காலஅட்டவணை மற்றும் உரிய வழிமுறைகளை சார்ந்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதேபோல், பயிற்சியில் ஆசிரியர்கள் தவறாமல் பங்கேற்பதை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளும் உறுதி செய்யவேண்டும். இதுதொடர்பாக அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment