கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அக்டோபர் 4-ம் தேதி முதல் நேரடி வகுப்புகள்
அக்.4-ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த கல்வியாண்டு முதல் தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. இடையில் தொற்று குறைந்தபோது ஒருசில பள்ளி வகுப்புகள், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்குக் கல்லூரிகள் திறக்கப்பட்டாலும், மீண்டும் தொற்று அதிகரித்ததால் அவை மூடப்பட்டன.
இதற்கிடையில், தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை குறைந்து, தினசரி தொற்று எண்ணிக்கை சராசரியாக 1,500 என்ற அளவில் இருந்து வருகிறது.
ஆசிரியர்கள், பெற்றோர்கள், நிபுணர்களிடம் கருத்து கேட்டு, கல்லூரிகள் செப்.1-ம் தேதி முதல் திறக்கப்பட்டன. கல்லூரிகளில் முதலாமாண்டு தவிர்த்து, 50% மாணவர்களுடன் சுழற்சி முறையில் வாரம் 6 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. முகக்கவசம் அணிதல், ஆசிரியர்கள், 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்ற வழிகாட்டு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அக்.4-ம் தேதி முதல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கப்படும் என்று கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்துக் கல்லூரிக் கல்வி இயக்குநர் சி. பூரணசந்திரன் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள், அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''2021- 2022ஆம் கல்வியாண்டின் பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர்களுக்கு 04.10.2021 முதல் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வகுப்புகள் தொடங்கிட நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிதாகச் சேர்க்கப்பட்ட மாணாக்கர்களுக்கு புத்தொளிப் பயிற்சி வழங்க கல்லூரி முதல்வர்கள் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
தங்களது மண்டலத்திற்கு உட்பட்ட அரசு உதவிபெறும் மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இதுதொடர்பாக உரிய அறிவுரைகளை வழங்குமாறு தெரிவித்துக் கொள்கிறேன்.
தகுதியுள்ள அனைத்து மாணாக்கர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்துமாறும் கல்லூரி வளாகங்களில் முகக் கவசம் கட்டாயம் அளிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியைத் தவறாது பின்பற்ற வேண்டும் என்பதையும் உறுதிப்படுத்துமாறு கல்லூரி முதல்வர்களைக் கேட்டுக் கொள்கிறேன்''
இவ்வாறு கல்லூரிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment