நேரடி நியமன பணிகளுக்கான வயது உச்ச வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டதற்கான அரசாணையை டிஎன்பிஎஸ்சி நடைமுறைப்படுத்தியது.
தமிழக அரசு துறைகளில் நேரடிநியமன பணிகளுக்கு வயது உச்சவரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும் என்று செப்டம்பர் 13-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு வெளியிட்டார்
அந்த அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் அதுதொடர்பான அரசாணையை தமிழக அரசின்தலைமைச் செயலர் வெ.இறையன்பு அன்றைய தினமே வெளியிட்டார்.
அந்த அரசாணையின்படி, டிஎன்பிஎஸ்சி, ஆசிரியர் தேர்வு வாரியம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், வனத்துறை பணியாளர் தேர்வு வாரியம் முதலிய அனைத்து தேர்வு முகமைகளால் நடத்தப்படும் நேரடி நியமன பணிகளுக்கு தற்போதைய வயது வரம்பு 2 ஆண்டுகள் உயர்த்தப்படும்.
இந்நிலையில், வயது வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிப்பு தொடர்பான அரசாணையை முதல்முதலாக டிஎன்பிஎஸ்சி நடைமுறைப்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்த இருக்கும் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்ககத்தில் கட்டிடக்கலை உதவியாளர் மற்றும் திட்ட உதவியாளர் தேர்வில் வயது வரம்பு 2 ஆண்டுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்றுதொடங்கியது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் அக்டோபர் 23-ம் தேதி ஆகும். மாஸ்டர் ஆப் டவுன் பிளானிங் பட்டதாரிகள் மற்றும் பிஆர்க், பிஇ. சிவில் இன்ஜினியரிங், ஏஎம்ஐஇ (சிவில்) முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி நடைபெற உள்ளது.
No comments:
Post a Comment