முதியோர் நலம் பேண ‘முதியோர் நலவாரியம்’ அமைக்க வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் வி.எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
உலக முதியோர் தினம் அக்.1-ம்தேதி கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 75 லட்சம் முதியோர் உள்ளனர்.
2030-ல் இந்த எண்ணிக்கை 1.5 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முதுமை அடைந்து வரும் இந்தியா, விரைவில் முதியோர்களின் உடல் நலம் மற்றும் முதியவர்களின் நிதி, குடும்ப நலம் ஆகிய இரண்டு பெரிய சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
பிரச்சினைகளும் தீர்வுகளும்
‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்பதுமிகச் சிறந்த மற்றும் பயனுள்ள திட்டமாகும்.
இதன்மூலம் அதிகம் பயன் பெறுபவர்கள் முதியோர்களே. கரோனா தடுப்பூசியை எப்படி, 80 வயது முதியவர்களுக்கு இல்லம் சென்று இலவசமாக போடப்பட்டதோ, அதேபோல் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் நிமோனியா தடுப்பூசியை இலவசமாகப் போட வேண்டும்.
சென்னை கிண்டியில் ரூ.220 கோடியில் முதியோர்களுக்காக தேசிய முதியோர் நல மையம் (மருத்துவமனை) நிறுவப்பட்டுள்ளது.
அது தற்போது கரோனா நோயாளிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதை விரைவில் முதியோர்கள் பயன்பெறும் வகையில் திறக்க வேண்டும்.
தொடர் சிகிச்சை மையங்கள்
முதுமையின் விளைவாக பலர் மறதிநோய், பக்கவாதம், உதறுவாதம் என்கிற பார்க்கின்சன்ஸ் நோய் மற்றும் மூட்டுநோய் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர் சிகிச்சை அவசியமாகிறது.
இதற்கு பல குடும்பங்களில் நிதி வசதி இடம் கொடுக்காது.
இந்நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களைக் கவனித்துக் கொள்ள தாலுகா அளவில் தொடர் சிகிச்சை மையங்களைஅரசு தொடங்க வேண்டும். வயதானகாலத்தில் பெரும்பாலான வர்கள் பல்வேறு நோய்களுடன் வாழ வேண்டியிருக்கிறது. பலருக்கு சரியான உறுதுணை இல்லை. படுத்த படுக்கையாகி விட்டால் பார்ப்பதற்கு யாரும் இல்லை. கைவிடப்பட்ட முதியோரின் நிலை பரிதாபத்துக்குரியது.
இப்படிப்பட்ட நிலையில் கருணைக்கொலையை நடைமுறைப்படுத்துவது குறித்து யோசிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஓர் தெளிவான, திடமான முடிவைஎடுக்கலாம். முதியவர்களுக்காக தொலைக்காட்சி ஒன்றை ஆரம்பித்து, அதில் உடல் நலம், மன நலம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், உணவு முறை மற்றும் குடும்ப நலம் சார்ந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் முதியவர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கும்.
சமூகம், நிதி சார்ந்த பிரச்சினை
முதியோர்களின் நிதி நிலைமையில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
இந்தியாவில் 10 முதல் 15 சதவீத முதியோர்கள் மட்டுமே ஓய்வூதியம் பெறுகிறார்கள். முதியோர்களுக்கு மாதம் ரூ.1,000 அரசு வழங்குகிறது. விலைவாசி அதிகரித்து வருவதால், உதவித் தொகையாக ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். தற்போது, ரூ.1,500 ஆகஉயர்த்தியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விதவைகளுக்கு மாதம் வழங்கப்படும் ரூ.1,000 உதவித் தொகையை ரூ.2 ஆயிர மாக உயர்த்த வேண்டும்.
முதியவர்களின் ஓய்வூதிய தொகையை அவர்களுடைய வீட்டுக்கே சென்று கொடுக்கும் திட்டத்தை ஆந்திராஅரசு அமல்படுத்தியுள்ளது. தற்போது, தமிழகத்தில் 80 வயது கடந்த முதியவர்களுக்கு வீட்டுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல், 60 வயதைக் கடந்த முதியவர்களுக்கும் வீட்டுக்கே சென்று அளிக்க வேண்டும்.
முதியோர்களில் பலர், வங்கியில் ஓர் தொகையைச் செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டியை வைத்துதான் வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறார்கள். மத்திய அரசு வங்கி வட்டியைக் குறைத்துவிட்டது. அதனால் பல முதியவர்களின் நிதி நிலைமையில் பெரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வட்டியை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்த வேண்டும்.
முதியோர்களைப் பராமரிக்க சட்டம்
முதியோர்களை சரியாகப் பராமரிக்காவிட்டால் அதற்கு பொறுப்புள்ள மகன் அல்லது மகளை தண்டிக்க ஒரு சட்டம் உள்ளது. முதியவர்கள் தங்கள் சொந்த வருவாய் மூலமோ, தங்கள் சொத்து மூலம் பெறும் வருவாயிலோ தங்களை பாதுகாத்துக் கொள்ள இயலாத சூழ்நிலையில் இச்சட்டத்தின் உதவியை நாடலாம்.
மேலும், முதியோர் இல்லங்களின் தரத்தை நிர்ணயிக்க அரசு ஓர் குழுவை அமைக்க வேண்டும்.
முதியோர் இல்லம் ஆரம்பிப்பதற்கு முன் இக்குழுவிடம் சான்று பெறவேண்டும். முதியோர் இல்லம்அமைந்துள்ள இடம், தரமான உணவு,மருத்துவ வசதி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் போதிய அளவுக்கு உள்ளதா என்பதை இக்குழு அடிக்கடி நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். இக்குழுவில் முதியோர் நல மருத்துவர் ஒருவர்இடம்பெற வேண்டும்.
முதியோர்களுக்காக நகர்ப்புறங்களில் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களிலும் முதியோர் இல்லங்களை ஆரம்பிக்க வேண்டும்.
முதியோர் நல வாரியம்
முதியோர்களின் கொடுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 15-ம் தேதியை ‘முதியோர் கொடுமை ஒழிப்பு விழிப்புணர்வு ஊட்டும்’ நாளாக 2006-ம் ஆண்டில் இருந்து அனுசரிக்கப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இந்த நாளில் முதியோரை மதித்தல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை வானொலி மூலம் நடத்தலாம்.
முதியோர்கள் நலம் பேண, அவர்களுக்கு என்று தனியாக ‘முதியோர் நல வாரியம்’ ஒன்றை அமைத்தால் மேற்சொன்ன அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற ஏதுவாக இருக்கும்.
No comments:
Post a Comment