1 - 8ஆம் வகுப்புகள் திறப்பு; செப். இறுதியில் முடிவு- அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பள்ளிகளைத் திறப்பது பற்றி மருத்துவ வல்லுநர்கள், பொது சுகாதாரத் துறையினர் ஆகியோரது ஆலோசனையை ஒட்டி, 30-ம் தேதி முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருவெறும்பூர், கணேசா ரவுண்டானா அருகில் உள்ள பெல் சமுதாயக் கூடத்தில், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தலைமையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பயனாளிகள் 88 பேருக்கு ரூ.35.31 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ''மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நேற்று நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைக் கூறினர். குறிப்பாகத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கலாம் என்றும், 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை மட்டும் தொடங்கலாம் என்றும் இருவேறு கருத்துகள் வரப் பெற்றன. அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கையை முதல்வரிடம் அளிக்க உள்ளோம்.
தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்.30-ம் தேதி வரை அமலில் உள்ளதால், அதற்குப் பிறகு முதல்வர் நடத்தவுள்ள கலந்தாலோசனைக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை அளிக்கும் அறிக்கையும் ஆய்வு செய்யப்படும். அந்தக் கூட்டத்தில் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் பொது சுகாதாரத் துறையினர் கூறும் ஆலோசனையைப் பின்பற்றி, பிற வகுப்புகளைத் திறப்பதா, வேண்டாமா என்று முதல்வர் முடிவு செய்து அறிவிப்பார்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
முன்னதாக, கரோனா பாதிப்பு சூழல் முடிந்து பள்ளிகள் முழு அளவில் செயல்படத் தொடங்கியதும் மன அழுத்தத்தைப் போக்க மாணவர்கள், பெற்றோருக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment